3 மாத சம்பள நிலுவை தொகை வழங்க கோரி அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


3 மாத சம்பள நிலுவை தொகை வழங்க கோரி அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 May 2019 11:00 PM GMT (Updated: 2019-05-07T00:35:35+05:30)

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு 3 மாத சம்பள நிலுவை தொகை வழங்க கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

உடுமலை,

உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவை பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. போதிய மழை இல்லாதது, வறட்சி ஆகியவற்றால் கடந்த 2017, 2018 ஆகிய 2 ஆண்டுகளாக அரவைக்கு தேவையான கரும்பு பதிவு ஆகவில்லை. அத்துடன் பதிவான கரும்பும் காய்ந்தது. அதனால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆலை இயங்கவில்லை.

இந்த ஆலை இயங்காத காலத்தில் தொழிலாளர்கள் வேறு சர்க்கரை ஆலைகளுக்கு பணிபுரிவதற்கு அனுப்பப்படுவது வழக்கம். அவ்வாறு வேறு ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் தொழிலாளர்கள் இந்த ஆலையில் கரும்பு அரவை தொடங்கப்படுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு திரும்ப அழைத்துக்கொள்ளப்படுவார்கள்.

ஆலை அரவைக்கு முன்பு அந்த தொழிலாளர்களுக்கு எந்திரங்களை சுத்திகரிப்பு செய்து அரவைக்கு தயார்படுத்தும் பணிகள் வழங்கப்படும். அதன்படி தற்போது இந்த ஆலையில் சுமார் 400 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆலை கடந்த 2 ஆண்டுகளாக மிகுந்த நிதி நெருக்கடியில் இருந்து வருகிறது. தொழிலாளர்களுக்கு அந்தந்த மாதத்தில் சம்பளம் கொடுக்க முடிவதில்லை. கடந்த ஆண்டு தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியபிறகே சம்பளம் கிடைத்தது.

இந்த நிலையில் ஆலையில் இந்த ஆண்டின் அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவை கடந்த மார்ச் மாதம் 30–ந்தேதி தொடங்கியது. இந்த நிலையில் இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோருக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 3 மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை அதனால் தொழிலாளர்கள், ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த 3 மாத சம்பளம் நிலுவைத்தொகையை வழங்கக்கோரி நேற்று ஆலைத்தொழிலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்திருந்தனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆலையின் பிரதான நுழைவு வாயில் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது 3 மாத கால நிலுவை சம்பள தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.


Next Story