காவேரிப்பட்டணம் அருகே ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


காவேரிப்பட்டணம் அருகே ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 May 2019 4:15 AM IST (Updated: 7 May 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே ரூ.1½ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் மேற்பார்வையில், காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்த உடன் மினிவேனை நிறுத்தி விட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் மினிவேனை சோதனை செய்தனர். அதில் 22 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த புகையிலை பொருட்கள் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த புகையிலை பொருட்களையும், மினிவேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story