இறால் பண்ணைகளை அகற்றக்கோரி கிராம மக்கள் தர்ணா
தாமோதரன் பட்டினத்தில் அமைந்துள்ள இறால் பண்ணைகளை முழுமையாக அகற்றக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்,
திருவாடானை தாலுகா வட்டாணம் ஊராட்சிக்கு உட்பட்டது தாமேதரன்பட்டினம். இந்த ஊரைச்சேர்ந்த ஆண்களும், பெண்களும் சி.ஐ.டி.யூ. கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சிவாஜி ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
இவர்கள் கலெக்டர் அல்லது மாவட்ட வருவாய் அதிகாரியை சந்தித்து தங்களின் கோரிக்கை குறித்து மனு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால் கோரிக்கை மனுக்களை பெற முடியாது என்றும், மனுக்களை பெட்டியில் போட்டுச்சென்றால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்து அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் தங்களின் கோரிக்கை குறித்து தெரிவித்ததாவது:– தாமோதரன்பட்டினம் பகுதியில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி ஏராளமான இறால் பண்ணைகள் அமைந்துள்ளன. இதனால் அந்த கிராமத்தில் ஒட்டுமொத்த குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது. கிராம மக்கள் தொற்றுநோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். அரசு செலவில் ரூ.9 லட்சத்தில் அமைத்து கொடுத்த குடிநீர் கிணறு இறால் பண்ணையால் பாழ்பட்டுபோய்விட்டது. இந்த இறால் பண்ணைகளை உடனடியாக அகற்ற வேண்டும் இல்லாவிட்டால் ஊரை காலிசெய்துவிட்டு வெளியேறுவது என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இறால் பண்ணைகளை அகற்றக்கோரி மாவட்ட நிர்வாகம், தாசில்தார் அலுவலகம் என தொடர்ந்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்காக தொடர் போராட்டங்கள் நடத்தியபோது சமரசம் செய்த அதிகாரிகள் உடனடியாக அனைத்து இறால் பண்ணைகளையும் அகற்றுவதாகவும், இதற்காக ஆய்வுக்குழு அமைக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இறால் பண்ணை உரிமையாளர்கள் பண்ணைகளில் கடல்நீர், நிலத்தடி நீரை நிரப்பி இறால் குஞ்சுகளை விட்டு வளர்த்து வருகிறனர். அரசால் தடைசெய்யப்பட்ட ரசாயன கழிவுகளும் இந்த பண்ணைகளில் இருந்து வெளியேறுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளோம். எனவே, உடனடியாக இந்த இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும். அதுவரை இங்கிருந்து செல்ல மாட்டோம். பட்டினி போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அழைத்து சென்று மனு கொடுக்க வைத்தனர். இதுதொடர்பாக தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.