அரியவகை கடல் பன்றி இறந்து கரை ஒதுங்கியது
தொண்டி அருகே பி.வி.பட்டினம் கடற்கரையில் அரிய வகை உயிரினமான கடல் பன்றி கரை ஒதுங்கி கிடந்தது.
தொண்டி,
தொண்டி அருகே உள்ள பி.வி.பட்டினம் கடற்கரையில் அரிய வகை உயிரினமான கடல் பன்றி கரை ஒதுங்கி கிடந்தது. சுமார் 4 அடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்ட இந்த கடல் பன்றி அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வனச்சரகர் சதீஷ் உத்தரவின் பேரில் வனவர் சுதாகர், வன காப்பாளர் ஜோசப், வேட்டை தடுப்பு காவலர்கள் செல்வராஜ், அய்யாபிச்சை, பாஸ்கர், மற்றும் ராஜேஸ் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அந்த கடல் பன்றி கடற்கரையிலேயே புதைக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கடலில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் பல உள்ளன. இதில் டால்பின், கடல் பசு, திமிங்கலம் மற்றும் கடல் பன்றி போன்றவை பாலூட்டி இனங்களாகும். பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா போன்ற கடல் பகுதியில் இந்த வகை உயிரினங்கள் குறைவாக உள்ளன. இதனால் இவற்றை வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை வேட்டையாடினால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.