கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி போலீசார் மடக்கி பிடித்தனர்


கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி போலீசார் மடக்கி பிடித்தனர்
x
தினத்தந்தி 6 May 2019 7:21 PM GMT (Updated: 2019-05-07T00:51:58+05:30)

வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றியதால் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற கூலித் தொழிலாளியை போலீசார் மடக்கி பிடித்தனர்.

சிவகங்கை,

விழுப்புரம் மாவட்டம், பாசார் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 43). இவரது சகோதரி கல்யாணி (45). இவர்கள் அங்கு கரும்பு வெட்டும் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இந்தநிலையில் குமாரும், கல்யாணியின் கணவரும் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல எண்ணினர். அதற்காக இவர்கள் சிவகங்கை மாவட்டம், இடையமேலூர் கிராமத்தை சேர்ந்த சந்திரன் என்பவரை தொடர்பு கொண்டனராம்.

அவர் 2 பேரையும் வெளிநாட்டிற்கு வேலை அனுப்புவதாக கூறி கடந்த 2016–ம் ஆண்டு தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4 லட்சத்தை பெற்றுக்கொண்டாராம். அதன்பின்பு சந்திரன் இருவரையும் வெளிநாட்டிற்கு அனுப்பாததால், பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அதற்கு சந்திரன் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த குமாரும், அவரது சகோதரியின் கணவரும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தனர்.

அதன்பேரில் சந்திரனை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாங்கி பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினாராம். அதன்பின்பு சந்திரன் தலைமறைவாகிவிட்டாராம்.

இந்தநிலையில் குமார், அவரது மனைவி மகேஸ்வரி (30), மகள் தரணி (10) ஆகியோருடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அமர்ந்திருந்தனர். அவர்கள் மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்துள்ளதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிய வந்தது. அவர் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகருக்கு, குமார் குடும்பத்தினரை மீட்க உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்கிருந்தவர்களை சோதனை செய்தனர். அப்போது பையில் மண்எண்ணெய் கேனுடன் அமர்ந்திருந்த குமார் குடும்பத்தினரை கண்டுபிடித்து, அவர்களை போலீஸ்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில் வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி, பணம் வாங்கி கொண்டு ஏமாற்றியதால் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து குமார் குடும்பத்தினர் சிவகங்கை தாலுகா போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு இன்ஸ்பெக்டர் சீராளன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story