குண்டும், குழியுமான சிவகாசி–சித்துராஜபுரம் சாலை வாகன ஓட்டிகள் அவதி


குண்டும், குழியுமான சிவகாசி–சித்துராஜபுரம் சாலை வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 7 May 2019 3:15 AM IST (Updated: 7 May 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் இருந்து சித்துராஜபுரம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சிவகாசி,

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்துராஜபுரம் பஞ்சாயத்து பகுதியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி சிவகாசி நகராட்சியை ஒட்டியுள்ள பகுதி என்பதால் சித்துராஜபுரம் மக்கள் தங்களது தேவைக்கு சிவகாசிக்கு அவசியம் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சிவகாசி நகராட்சி எப்படி வளர்ச்சி அடைந்து வருகிறதோ? அதே போல் சித்துராஜபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியிலும் அதிக அளவில் மக்கள் குடியேறி வருகிறார்கள். இதனால் இந்த பகுதியில் இருந்த காலி இடங்கள் அனைத்தும் தற்போது குடியிருப்பு பகுதிகளாக மாறி வருகிறது.

சிவகாசி நகராட்சியில் போதிய இடம் கிடைக்காதவர்கள் தற்போது முதலில் தேர்வு செய்வது தண்ணீர் வசதியுடன் உள்ள சித்துராஜபுரம் பஞ்சாயத்து பகுதியைதான். இப்படி சிறப்பு வாய்ந்த சித்துராஜபுரம் பஞ்சாயத்துக்கு சிவகாசி நகராட்சியில் இருந்து கருமன்கோவில் வழியாக சாலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இந்த சாலை காணப்படுவதால், பெரும்பாலான வாகனங்கள் சித்துராஜபுரம், தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, திருவேங்கடகம், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளுக்கு செல்ல இந்த பாதையை பயன்படுத்தி வந்தனர். சிவகாசி நகராட்சியில் இருந்து சித்துராஜபுரம் பஞ்சாயத்துக்கு செல்ல இந்த சாலையில் 3 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த பாதையில் அதிக அளவில் கனரக வாகனங்கள் சென்று வருவதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சாலையின் பெரும் பகுதி சேதம் அடைந்து காணப்படுவதால் இந்த பகுதியை கடந்து செல்ல கூடுதல் நேரம் ஆகிறது என்று வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மேடு, பள்ளமாக இருக்கும் இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும் போது அந்த வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சிவகாசியில் இருந்து கருமன்கோவில் வழியாக செல்லும் சித்துராஜபுரம் செல்லும் சாலையை விரைந்து சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story