பெரம்பலூர் மாவட்ட வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்ட பள்ளிவாசல் நிர்வாகிகள்


பெரம்பலூர் மாவட்ட வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்ட பள்ளிவாசல் நிர்வாகிகள்
x
தினத்தந்தி 6 May 2019 10:00 PM GMT (Updated: 6 May 2019 7:48 PM GMT)

பெரம்பலூர் மாவட்ட வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தை பள்ளிவாசல் நிர்வாகிகள் முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர், 

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் நோன்பு இருப்பது வழக்கம். அவர்களுக்கு பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி வழங்குவதற்காக தமிழக அரசு சார்பில் பச்சரிசி மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான அதற்கான அறிவிப்பை தமிழக அரசு கடந்த 4-ந் தேதி அரசாணையாக வெளியிட்டது. ரம்ஜான் நோன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கப்படுவதால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 50 பள்ளி வாசல்களில் இருந்து நிர்வாகிகள், தங்கள் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி பெறுவதற்கான ஆணையை வாங்க கலெக்டர் அலுவலகத்தில் முதல் தளத்தில் செயல்படும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது அலுவலகத்தில் உள்ளவர்களிடம் பச்சரிசி பெறுவதற்கான ஆணையை தருமாறு கேட்டனர். அதற்கு அவர்கள் இன்னும் அரசிடம் இருந்து எங்களுக்கு அரசாணை வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். அப்போது பள்ளிவாசல் நிர்வாகிகள் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை தங்களின் செல்போனில் இருந்ததை காண்பித்தனர். இதையடுத்து அதிகாரிகள் நாங்கள் கணினியில் இணையதளத்தில் பார்த்து விட்டு கூறுகிறோம் என்றனர்.

அப்போது அலுவலக இணையதள முகவரிக்கும் அந்த அரசாணை வந்திருந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த அரசாணையை கலெக்டரிடம் காண்பித்து கையெழுத்து பெறுவதற்காக சென்றனர். இதனை கண்ட பள்ளிவாசல் நிர்வாகிகள் அரசாணை வந்தும், அதனை கூட கவனிக்காத அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்தும், பள்ளிவாசலுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி பச்சரிசியை தாமதமாக வழங்குவதை கண்டித்தும் மாவட்ட வழங்கல்-நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தை சிறிது நேரம் முற்றுகையிட்டனர்.

Next Story