மக்கள் நினைத்தால் மாற்றம் உறுதி: ‘‘ஓட்டுகளை விலை கொடுத்துவிடாதீர்கள்’’ கமல்ஹாசன் பேச்சு


மக்கள் நினைத்தால் மாற்றம் உறுதி: ‘‘ஓட்டுகளை விலை கொடுத்துவிடாதீர்கள்’’ கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 7 May 2019 4:30 AM IST (Updated: 7 May 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டுகளை விலை கொடுத்துவிடாதீர்கள் என்றும், மக்கள் நினைத்தால் மாற்றம் உறுதி எனவும் திருப்பரங்குன்றம் தொகுதி பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

திருப்பரங்குன்றம்,

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று 2–வது நாளாக பிரசாரம் செய்தார். அவர் நாகமலைபுதுக்கோட்டையில் இருந்து பிரசாரத்தை தொடங்கி, பல்வேறு இடங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:–

தமிழகம் முழுவதும் செல்லும் இடமெல்லாம் மக்களின் அன்பு கிடைக்கிறது. அதற்காக நன்றி தெரிவிக்கிறேன். இங்கு தற்போது பல்கலைக்கழகம் இருப்பதுபோல், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெரும்கல்வி உருவான இடம், சமணர்கள் வாழ்ந்த இடம். கல்விக்காக தானம் செய்யப்பட்ட இடம் என்ற பெருமையும் நாகமலை புதுக்கோட்டைக்கு உண்டு. ஆனால் குடிநீர்தான் இல்லை. இந்த அவலம் இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே உள்ளது.

குடிநீர் பிரச்சினையை போக்க வேண்டும். மக்களுக்கு குடிநீர்தான் முக்கியம். குடிநீருக்காக குடிமராமத்து செய்யப்பட வேண்டும். ஆனால் குடிமராமத்து செய்யாமலேயே செய்ததாக கணக்கு காட்டுவார்கள். அதற்கு கஜானாவை திறந்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். மக்களின் மீது நேசம் இல்லாமல் மக்களின் நலன் இல்லாமல் ஆட்சி நடக்கிறது.

ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை விட தமிழகத்தில் மழை அதிகமாக பெய்கிறது. இது விஞ்ஞான ரீதியாக சொல்லப்படுகிறது. ஆனால், குடிநீருக்காக தண்ணீரை அரசு பாதுகாப்பது இல்லை.

மக்கள் தான் தலைவன். மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ரத்தம் சிந்தி தியாகம் செய்து பாடுபட்டு வாங்கிய சுதந்திரம் என்று தேச தலைவர்களின் வரலாறு கூறுகிறது. அதேபோல் நாளைய வரலாற்றில் மக்களுக்காக நாம் செய்த, செய்யப்போகிற நல்ல காரியங்கள் வரலாறாக அமைய வேண்டும். அதில் நம் பெயர் இடம் பெறுகிறது என்ற போது மக்களுக்காக செய்தோம் என்று மார்தட்டி கொள்ளலாம். நாட்டை நல்ல பாதையில் வழி நடத்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதற்கான ஆரம்பம் நாளை நமதே.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story