கட்டிட தொழிலாளியை தாக்கி பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது


கட்டிட தொழிலாளியை தாக்கி பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 7 May 2019 4:15 AM IST (Updated: 7 May 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

அரியாங்குப்பத்தில் கட்டிட தொழிலாளியை தாக்கி பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் அருந்ததிபுரம் அன்னை நகரை சேர்ந்தவர் தேவா (வயது 20), கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இரவில் தேவா வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அரியாங்குப்பம் நோக்கி சென்றார்.

அரியாங்குப்பம் மார்க்கெட் அருகே அவர் சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென அவரை வழிமறித்தனர். மேலும் அவர் வைத்திருந்த 200 ரூபாய் மற்றும் அவருடைய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது.. புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் கட்டிட தொழிலாளியிடம் பணம் பறித்த 3 பேரையும் பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தேவாவிடம் பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றவர்கள் மணவெளி மாஞ்சாலை ராம்சிங் நகரை சேர்ந்த ராஜீ என்ற ரமணா (வயது 23), தவளக்குப்பம் அருகே உள்ள தானாம்பாளையத்தை சேர்ந்த பிரேம்குமார் (19) மற்றும் தமிழக பகுதியான பெரியகட்டுப்பாளையம் பிரிதிவிராஜ் (19) என்பது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதில் பாகூரை அடுத்த மணமேடு பகுதியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று ரமணா, பிரேம்குமார் மற்றும் பிரிதிவிராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் பறித்துச் சென்ற மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரமணா மற்றும் பிரேம்குமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. வழிப்பறி கொள்ளையர்களை விரைவாக கைது செய்த குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் சிவகணேஷ், வசந்தராஜா ஆகியோரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி பாராட்டினார்.

Next Story