போலீசார் விசாரணை நடத்தியதால் மன உளைச்சல், கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற கணவன்-மனைவி, தஞ்சையில் பரபரப்பு
கொலை வழக்கு தொடர்பாக போலீசார் அழைத்து விசாரணை நடத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளானவர், தனது மனைவியுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த மனோஜிப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 38). இவருடைய மனைவி கனகா(35). இவர்கள், கேட்டரிங் தொழில் செய்து வருகிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன், அவரது வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெங்கடேசன் வீட்டின் அருகே வசிக்கும் கொத்தனார் செல்வராஜ் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் வெங்கடேசனை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது வெங்கடேசன் மனைவி கனகா தனது கணவரை அழைத்து செல்ல விடாமல் போலீசாரை தடுத்தார். இதனால் போலீசார், வெங்கடேசனையும், கனகாவையும் திட்டியதாக தெரிகிறது. விசாரணைக்கு பின்னர் மணிகண்டன் கொலை வழக்கில் வெங்கடேசனுக்கு தொடர்பு இல்லை என்பது தெரிய வந்ததையடுத்து வெங்கடேசனை போலீசார் விடுவித்தனர்.
இருப்பினும் அந்த பகுதியில் வசிப்பவர்கள் வெங்கடேசனையும், கனகாவையும் தவறாக எண்ணி வந்தனர். மேலும் வெங்கடேசன் நடத்தி வந்த கேட்டரிங் தொழில் முழுமையாக பாதிப்பு அடைந்தது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடேசன், தனது மன உளைச்சலுக்கு காரணமான தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தஞ்சை கலெக்டர் மற்றும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளார். ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் அவமானம் அடைந்த கணவன்-மனைவி இருவரும், தங்களது கவுரவமும் போய் விட்டது, தொழிலும் போய் விட்டது. இனிமேல் வாழ்வதை விட சாவதே மேல் என்று முடிவெடுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது அவர்கள் கையில் ஒரு கேன் நிறைய டீலையும் எடுத்துக்கொண்டு வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் வந்தவுடன் டீசலை தங்கள் மேல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து டீசல் கேனை பறித்ததுடன், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்தனர். பின்னர் இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் அங்கு வந்த தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார், அவர்களை போ லீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story