இந்து கோவில்களை நிர்வகிக்க நலவாரியம் அமைக்க வேண்டும் எச்.ராஜா வலியுறுத்தல்


இந்து கோவில்களை நிர்வகிக்க நலவாரியம் அமைக்க வேண்டும் எச்.ராஜா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 May 2019 10:00 PM GMT (Updated: 6 May 2019 8:11 PM GMT)

இந்து கோவில்களை நிர்வகிக்க நலவாரியம் அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தினார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் தனியார் மண்டபத்தில் மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள் பா.ஜனதாவில் இணையும் விழா நேற்று நடந்தது. திருச்செந்தூர் அமலிநகரைச் சேர்ந்த நெப்போலியன் தலைமையில், மாற்று கட்சியைச் சேர்ந்த சுமார் 200 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையை பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

திருச்செந்தூர் அமலிநகரில் வசிக்கும் கிறிஸ்தவ மக்களில் ஒரு தரப்பினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அங்கு நவீன தீண்டாமையில் ஈடுபட்டவர்கள் மீது வருவாய் துறை, காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலில் சாமக்கொடை நடத்துவதற்கு போலீசார் நேர கட்டுப்பாடு விதித்து இடையூறு செய்கின்றனர். அவ்வாறு போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது.

திருச்செந்தூர் கோவிலில் விஞ்ஞான முறைப்படி, கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை நிறுத்தி விட்டு, மயில் சிலையை திருடி எடுத்து சென்றுள்ளனர். பின்னர் அந்த சிலையை மீண்டும் அங்கு வைத்துள்ளனர். எனவே இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சதுரகிரி மலை கோவிலில் அன்னதானம் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்ட இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அலுவலரை 24 மணி நேரத்தில் சஸ்பெண்டு செய்ய வேண்டும். மழை வேண்டி, கோவில்களில் யாகம் நடத்துவது வரவேற்கத்தக்கது.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்தது. எனவே, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு, உலகம் போற்றும் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி குறை கூறி பேசுவதற்கு தகுதி இல்லை.

கடந்த 1959-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் அமல்படுத்திய பிறகு கோவில்களில் ரூ.10 லட்சம் கோடிக்கு அதிகமாக வருவாய்கள், சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. எனவே, குன்றக்குடி அடிகளார் தலைமையிலான கமிட்டி வழங்கிய பரிந்துரையின்படி, இந்து கோவில்களை நிர்வகிக்க நலவாரியம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

அப்போது மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்வேல், மாவட்ட பொதுச்செயலாளர் நெல்லையம்மாள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story