சுருளி அருவி பூசாரி கொலை சம்பவத்தில், கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
சுருளி அருவி பூசாரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
உத்தமபாளையம்,
சுருளி அருவியில் பூத நாராயணன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பூசாரியாக பணியாற்றி வந்தவர் மலையன் என்ற பாண்டி (வயது 70). அவருடன் மற்றொரு பூசாரி பாலசுப்பிரமணியன் என்பவர் பணியாற்றுகிறார். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி இரவு இந்த கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பூசாரி மலையனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
பூசாரி பாலசுப்பிரமணியனை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பி சென்றனர். அவருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் உண்டியல் திருட்டு அல்லது வேறு காரணங்களால் நடந்துள்ளதா? என்பது குறித்தும் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவையில்லாமல் ஏற்கனவே கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்களின் கைரேகைகளும், கோவிலில் பதிவாகியுள்ள கொலையாளிகளின் கைரேகைகளும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று கொலை சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடந்த கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் கோவில் அருகேயுள்ள கடை ஒன்றின் வெளியே வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்துள்ளனர். அதில் ஒருவர் முகமூடி அணிந்துள்ளார். மற்றொருவர் முகமூடி அணியவில்லை. அவர்கள் புகைப்படம் தெளிவாக பதிவாகவில்லை. இதனால் கொலையாளிகளை முழுமையாக அடையாளம் காண முடியவில்லை. இதனால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
Related Tags :
Next Story