துறையூர் அருகே மாணவிகள் விடுதி சுவர் இடிந்து விழுந்து கொத்தனார் பலி; பெண் படுகாயம்


துறையூர் அருகே மாணவிகள் விடுதி சுவர் இடிந்து விழுந்து கொத்தனார் பலி; பெண் படுகாயம்
x
தினத்தந்தி 7 May 2019 4:15 AM IST (Updated: 7 May 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் அருகே மாணவிகள் விடுதி சுவர் இடிந்து விழுந்து கொத்தனார் பலியானார். பெண் படுகாயம் அடைந்தார்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் மலையப்பன் சாலையில் பழங்குடியினர் மாணவிகள் விடுதி உள்ளது. இந்த விடுதி கட்டிடம் சேதம் அடைந்து இருந்ததால், அதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். மாணவிகளின் கோரிக்கையை ஏற்று அந்த விடுதி கட்டிடத்தை இடித்துவிட்டு தற்போது, ரூ.2கோடியே 30 லட்சம் மதிப்பில் புதிய விடுதி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தரமற்ற கட்டுமான பொருட்களை கொண்டு விடுதி கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். நேற்று விடுதியின் முதல்தளம் கட்டும் பணியில் கண்ணனூர் சமத்துவபுரத்தை சேர்ந்த கொத்தனார் மணிபாரதி (வயது 42) மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

முதல்தளத்தில் 20 அடி உயரத்தில் நின்று மணிபாரதி குறுக்கு சுவர் கட்டிக்கொண்டிருந்தபோது, திடீரென்று சுவர் இடிந்து கீழே விழுந்தது.

அப்போது அங்கு நின்று சுவர் கட்டிக்கொண்டிருந்த மணிபாரதியும், அவருடன் நின்று பணியாற்றிய துறையூர் நத்தகாடு விநாயகர் தெருவை சேர்ந்த சங்கீதா (32) ஆகியோரும் கீழே விழுந்தனர்.

படுகாயம் அடைந்த இரு வரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மணிபாரதி இறந்தார். சங்கீதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆனந்த் தலைமையில் பொதுமக்கள் துறையூர்-திருச்சி சாலையில் கூடினர். பழங்குடியினர் மாணவிகள் விடுதி கட்டிடம் தரமற்ற கட்டுமான பொருட்களை கொண்டு கட்டப்பட்டு வருகிறது. இதனால் தான் இந்த விபத்து நடைபெற்று உள்ளது. எனவே தரமான கட்டுமான பொருட் களை கொண்டு விடுதி கட்டவேண்டும் என வலியுறுத்தி மறியல் செய்ய முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத் தினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததையடுத்து, அவர்கள் மறியலில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story