தஞ்சை அரண்மனை வளாகத்தில் போலீஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வு, கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு


தஞ்சை அரண்மனை வளாகத்தில் போலீஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வு, கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு
x
தினத்தந்தி 7 May 2019 4:30 AM IST (Updated: 7 May 2019 2:29 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அரண்மனை வளாகத்தில் பாதுகாப்பு போலீஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டனர்.

தஞ்சாவூர், 

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததையடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் புகழ்வாய்ந்த கோவில்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து தமிழக அரசின் பாதுகாப்பு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தன் தஞ்சை பெரியகோவிலுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் பாதுகாப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், நாகராஜன் ஆகியோர் நேற்று தஞ்சை அரண்மனை வளாகத்திற்கு வந்தனர். அரண்மனை வளாகத்தில் கலைக்கூடம், மணிக்கூண்டு, தர்பார் மண்டபம், சங்கீத மகால், உலகப்புகழ் பெற்ற சரஸ்வதி மகால் நூலகம் போன்றவை உள்ளன.

இவ்வாறு அரியவகை பொக்கிஷங்கள் நிறைந்த இந்த அரண்மனை வளாகத்தை சுற்றிப்பார்ப்பதற்கு உலகின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக சரஸ்வதி மகால் நூலகத்தில் அரிய வகை ஓலைச்சுவடிகள், வேறு எங்கும் கிடைக்காத நூல்கள், மோடி ஆவணங்கள் போன்ற பல்வேறு வகைகள் உள்ளன.

இந்த நிலையில் தமிழக அரசின் பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், நாகராஜன் ஆகியோர் காலை 10 மணிக்கு கலைக்கூடம் சென்றனர். அங்குள்ள கலைபொருட்களை பார்வையிட்ட பின்னர் காப்பாட்சியர் சிவக்குமாரிடம் கலைக்கூடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை எவ்வளவு? என கேட்டறிந்தனர்.

பின்னர் அருகில் உள்ள சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சென்றனர். அங்கு நுழைவு வாயிலில் சரஸ்வதி மகால் வெளியீட்டு நூல்கள் விற்பனை மையம், ஒலி, ஒளி காட்சிகூடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என கூறினர். மேலும் அங்கு எத்தனை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது?. அந்த கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை எங்குள்ளது? என்பது குறித்து ஆய்வு நடத்தினர்.

பின்னர் அரண்மனை தர்பார் மண்டபத்தை பார்த்தனர். பின்னர் இங்கும், அரண்மனை வளாகத்தை சுற்றிலும் இரவு நேரங்களில் வெளிச்சம் இருக்கும் வகையில் போதுமான அளவிற்கு, தேவையான இடங்களில் மின் கோபுரம் அமைத்து விளக்குகள் பொருத்த வேண்டும் என்றும் கூறினர்.

இதனைத்தொடர்ந்து அரண்மனை வளாகம் முழுவதும் ஆய்வுகள் நடத்தினர். அப்போது தஞ்சை அரண்மனை வளாகத்தில் அரியவகை பொக்கிஷங்கள் நிறைந்துள்ளது. ஆனால் போதுமான பாதுகாப்பு இல்லை. எனவே பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். இதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்

அய்யன்கடை தெருவில் இருந்து அரண்மனை வளாகம் உள்ளே யாரும் நுழையாத வகையில் தடுப்பு சுவர்களை ஏற்படுத்தி முழுமையாக கண்காணிக்க வேண்டும். அவசர காலங்களில் வெளியேறுவதற்கு வசதியாக தேவையான இடங்களில் அவசர வழிகள் ஏற்படுத்த வேண்டும். தானாக இயங்கும் தீயணைப்பு கருவிகளை பொருத்த வேண்டும் என அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story