சேலம் அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்புக்கு 9,520 விண்ணப்பங்கள் வினியோகம் கலந்தாய்வு 10-ந் தேதி தொடங்குகிறது
சேலம் அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்புக்கு 9,520 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 10-ந் தேதி தொடங்கி நடக்கிறது.
சேலம்,
சேலம் செரி ரோட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் உள்ளிட்ட 19 இளங்கலை, அறிவியல் பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த பாடப்பிரிவுகளில் 1,562 இடங்கள் உள்ளன.
இந்தநிலையில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மாதம் 15-ந் தேதி முதல் விண்ணப்ப வினியோகம் தொடங்கி கடந்த 3-ந் தேதி வரை வழங்கப்பட்டது.
இதையொட்டி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வந்து விண்ணப்பங்களை வாங்கி செல்கின்றனர். இதையடுத்து மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. பொதுப்பிரிவினர் ரூ.50 கொடுத்தும், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் அதற்கான சான்றிதழை காண்பித்து இலவசமாகவும் விண்ணப்பங்களை பெற்று சென்றனர்.
இதுகுறித்து கல்லூரி பேராசிரியர்கள் கூறும் போது, ‘இளங்கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புக்காக 12 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு இருந்தன. இதில் 9 ஆயிரத்து 520 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசிநாளான நேற்று 7 ஆயிரம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. மாணவர்கள் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு வருகிற 10-ந் தேதி (வெள்ளிக் கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 20-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடைபெறுகிறது’ என்றனர்.
Related Tags :
Next Story