மோடி மீண்டும் பிரதமராக வரவே முடியாது காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவே முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தொழிலாளர் தின பொதுக்கூட்டம் திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் 3 எம்.எல்.ஏ.க்களை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்காக எடுத்த முயற்சி நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. இடைத்தேர்தலில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்காது என்பது நன்றாக தெரிந்தவுடன், 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை வெளியேறுவதன் மூலம் அரசாங்கத்தை காப்பாற்றி கொள்ளலாம் என்ற முதல் - அமைச்சர் உடைய சிந்தனைக்கு துணை போன சபாநாயகர் தற்போது மிக பெரிய குற்றவாளி கூண்டில் நிற்கிறார். இந்திய ஜனநாயகத்தில் எந்த பதவிக்கும் இல்லாத பெருமை சபாநாயகருக்கு உண்டு.
பிரதமர் நரேந்திரமோடி தனக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று தெரிந்தவுடன் எதிர்கட்சி மட்டுமில்லாமல், தன்னுடைய சொந்த கட்சியிலேயே கூட அவருக்கு எதிரான ஒரு சூழல் நிலவுகிறது என்பதை தெரிந்து கொண்டு மிகவும் அமைதி இழந்து காணப்படுகிறார். மத்திய, மாநில ஆட்சியில் மாற்றம் கண்டிப்பாக இருக்கும். மோடி மீண்டும் பிரதமராக வரவே முடியாது.
வேலூர் நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே விதமான கல்வி முறையை கொண்டு வர வேண்டும். அப்போது தான் ஒரே மாதிரியான தேர்வு முறையை நடத்த முடியும். கல்வி முறையில் மாற்றம் இருப்பது போன்று, தேர்வு முறையிலும் மாற்றம் வேண்டும்.
இந்த மாவட்டத்தில் தென்பெண்ணை-செய்யாறு நதிநீர் இணைப்பு வேண்டும் என்று நீண்ட காலமாக நாங்கள் சொல்லி வருகிறோம். மாநில அரசு இதை செய்யவே இல்லை. ஒடிசாவில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் மோடி நேரில் சென்று பார்க்கிறார். ஆனால் கஜா புயலின் போது தமிழகத்திற்கு வரவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாத்தனூர் அணையை தூர்வாருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது திருவண்ணாமலை மாவட்ட தலைவர் குமார், மாவட்ட துணைத்தவைலர் சீனிவாசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் புருஷோத்தமன், செந்தமிழ் அரசு, நகர தலைவர் வெற்றிசெல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. விஜயக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story