ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி, சாவதற்கு முன்பு ‘செல்பி’ எடுத்து உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர் - உருக்கமான தகவல்


ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி, சாவதற்கு முன்பு ‘செல்பி’ எடுத்து உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர் - உருக்கமான தகவல்
x
தினத்தந்தி 7 May 2019 4:45 AM IST (Updated: 7 May 2019 5:16 AM IST)
t-max-icont-min-icon

கோதையாற்றில் ஆற்றில் மூழ்கி இறந்த 3 மாணவர்கள் இறப்பதற்கு முன்பு செல்பி எடுத்து உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

குலசேகரம்,

கேரள மாநிலம் பாறசாலை அருகே உதயன்குளங்கரை, பிலாமூட்டுக்கடையை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 24). இவர் வெள்ளையாணி அரசு வேளாண்மை கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் சாந்தணு (24), அருள்மோகன் (24) ஆகியோரும் படித்து வந்தனர்.

இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் 2 மோட்டார் சைக்கிள்களில் குமரி மாவட்டம் குலசேகரம் அருகே கோதையாறு பகுதிக்கு சுற்றுலா வந்தனர். அங்கு கோதையாறு மார்க்கெட் பகுதியில் ஆற்றில் குளிக்க இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக 3 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பேச்சிப்பாறை போலீசாரும், குலசேகரம் தீயணைப்பு படைவீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்று பிணங்களை மீட்டனர். தொடர்ந்து மாணவர்களின் உடல்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆற்றில் மூழ்கி பலியான கேரள மாணவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் 3 பேரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். அவர்களுக்கு சுற்றுலா செல்வது மிகவும் விருப்பமானது என்பதால் பல இடங்களுக்கு ஒன்றாகவே சுற்றுலா சென்று வந்தனர்.

கோதையாறுக்கு சுற்றுலா வந்த போது 3 பேரும் இங்கு செல்பி எடுத்து உள்ளனர். மேலும், அதை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர். இவர்களது செல்பியை பார்த்து, உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், அதுவே அவர்களது கடைசி செல்பியாக இருக்கும் என யாரும் நினைக்கவில்லை. நண்பர்கள் 3 பேரும் ஆற்றில் மூழ்கி பலியான தகவல் அறிந்ததும், அந்த புகைப்படத்தை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

Next Story