குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் - பெண்ணாடம் அருகே பரபரப்பு


குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் - பெண்ணாடம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 7 May 2019 4:15 AM IST (Updated: 7 May 2019 5:16 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

பெண்ணாடம் அடுத்த கணபதிகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட காலனியில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால், அப்பகுதி மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் தினசரி காலி குடங்களுடன், அருகில் உள்ள வயல் வெளி பகுதிகளில் இயங்கும் மின் மோட்டார்கள் மூலமாக குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் வழங்கக்கோரி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதுபற்றி அறிந்த அதிகாரிகள், பொதுமக்களை அழைத்து பேசி, ஒருவாரத்துக்குள் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடிநீர் வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story