வத்திராயிருப்பு பகுதியில் கடும் வறட்சி: விலை கொடுத்து தண்ணீர் வாங்கி நெற்பயிரை காப்பாற்றும் நிலை


வத்திராயிருப்பு பகுதியில் கடும் வறட்சி: விலை கொடுத்து தண்ணீர் வாங்கி நெற்பயிரை காப்பாற்றும் நிலை
x
தினத்தந்தி 8 May 2019 4:30 AM IST (Updated: 7 May 2019 10:38 PM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு பகுதியில் வறட்சியின் காரணமாக நெற்பயிரை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி வருகின்றனர்.

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளான வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜாபுரம், கான்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல், தென்னை உள்ளிட்ட விவசாயமே பிரதானமாக உள்ளது. இந்த பகுதிகளில் பருவமழை பொய்த்துப்போன நிலையில் கோடை மழையும் திருப்தியாக இல்லை.

போதிய மழை இல்லாததால் வறட்சியின் காரணமாக நீர் நிலைகள் வறண்டு காணப்படுவதால் தண்ணீரின்றி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கோடைமழையை நம்பி ஏராளமான விவசாயிகள் இறவை பாசனத்தில் நெல் பயிரிட்டுள்ளனர். நன்கு வளர்ந்து கதிர் விட்டுள்ள நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலை கொடுத்து வாகனங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து வயலில் பாய்ச்சி பயிரை காப்பாற்ற போராடி வருகின்றனர்.

வத்திராயிருப்பு அருகே உள்ள வ. புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பண்டரிநாதன் என்ற விவசாயி வத்திராயிருப்பு சாலையில் 4 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நெற்பயிர்கள் கதிர் வந்து ள்ள நிலையில் தினமும் 20 டேங்கர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சி வருவதாக தெரிவித்தார்.

வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story