காங். எம்.எல்.ஏ.க்கள் கூறுவதில் எந்த தவறும் இல்லை சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆவார் மந்திரி எம்.பி.பட்டீல் சொல்கிறார்


காங். எம்.எல்.ஏ.க்கள் கூறுவதில் எந்த தவறும் இல்லை சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆவார் மந்திரி எம்.பி.பட்டீல் சொல்கிறார்
x
தினத்தந்தி 7 May 2019 10:30 PM GMT (Updated: 7 May 2019 6:25 PM GMT)

சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆவார் என்றும், அவர் முதல்-மந்திரி ஆவார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூறுவதில் எந்த தவறும் இல்லை என்றும் மந்திரி எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆவார் என்றும், அவர் முதல்-மந்திரி ஆவார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூறுவதில் எந்த தவறும் இல்லை என்றும் மந்திரி எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சித்தராமையா மீண்டும்...

சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆவார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொல்லி வருகின்றனர். அவர்கள் சொல்வதில் எந்த தவறும் இல்லை. இதே கருத்தை தான் சிக்பள்ளாப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதாகர் சொல்லி இருக்கிறார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தலைவர் சித்தராமையா தான். சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆவதற்கு நானும் ஆதரவு அளிக்கிறேன். அவர் மீண்டும் முதல்-மந்திரி ஆவதில் என்ன தவறு இருக்கிறது.

சித்தராமையா பதவியில் இருந்த 5 ஆண்டுகளும் நல்லாட்சி கொடுத்தார். ‘அன்ன பாக்ய’, ‘சீரபாக்ய’ உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்தார். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் மக்கள் காங்கிரசை நிராகரித்து விட்டனர். இதனால் சித்தராமையாவால் மீண்டும் முதல்-மந்திரி ஆக முடியவில்லை. என்றாலும், சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர்.

5 ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும்

அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும். அப்போது சித்தராமையா முதல்-மந்திரி ஆவார். தற்போது ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. 5 ஆண்டுகளும் கூட்டணி ஆட்சி நீடிக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. கூட்டணி ஆட்சியில் அதிகாரத்தை மாற்றுவது தொடர்பாக இதுவரை எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் ராகுல்காந்தி, தேவேகவுடா பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுப்பார்கள்.

எனக்கும் முதல்-மந்திரி பதவி மீது ஆசை உள்ளது. முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் நானும் இருக்கிறேன். அதற்கு முன்பாக சித்தராமையா முதல்-மந்திரி ஆக வேண்டும். நான் முதல்-மந்திரியாக இன்னும் காலம் இருக்கிறது. அதற்காக நான் காத்து இருக்கிறேன்.

கூட்டணிக்கு எதிராக செயல்பட்டுள்ளனர்

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி 18 முதல் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. பா.ஜனதாவினர் 22 தொகுதிகளில் வெற்றி பெறுவதாக கூறி வருகின்றனர். தேர்தல் முடிவுகள் யார் சொல்வது சரியாக இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மண்டியா தொகுதியில் கூட்டணி தர்மம் மீறப்பட்டுள்ளது. சிலர் கூட்டணிக்கு ஆதரவாகவும், இன்னும் சிலர் கூட்டணிக்கு எதிராகவும் செயல்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்களான சித்தராமையா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக மண்டியாவில் பிரசாரம் செய்திருந்தாலும், மண்டியா காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் செய்யவில்லை. துமகூரு தொகுதியில் தேவேகவுடாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் இருந்தனர். அந்த தொகுதியில் தேவேகவுடா வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு மந்திரி எம்.பி. பட்டீல் கூறினார்.

Next Story