வேப்பனப்பள்ளி அருகே விபத்து, தனியார் பஸ்-வேன் மோதி 2 பெண்கள் பலி - சிறுவர்கள் உள்பட 11 பேர் படுகாயம்
வேப்பனப்பள்ளி அருகே தனியார் பஸ்-சரக்கு வேன் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியானார்கள். சிறுவர்கள் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பெரியதம்மாண்டரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 15 பேர் நேற்று காலை மாங்காய் அறுவடை செய்வதற்காக சரக்கு வேனில் சென்றனர். தற்போது பள்ளிகள் கோடை விடுமுறை என்பதால், சிறுவர்களும் அறுவடை வேலைக்கு சென்றனர்.
இந்த வேனில் சென்றவர்கள், வேலையை முடித்து விட்டு மீண்டும் மாலை வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் வந்த வேன் வேப்பனப்பள்ளி-நாச்சிக்குப்பம் சாலையில் மார்கண்டேய நதி பாலத்தின் அருகே வளைவில் சென்றது. அப்போது அந்த வழியாக எதிரே கிருஷ்ணகிரி நோக்கி வந்த தனியார் பஸ், சரக்கு வேன் மீது மோதியது.
இந்த விபத்தில் ஜெயம்மா (வயது 65), திம்மக்கா(60) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சீனிவாசன்(45), அருண்குமார்(25), கிருஷ்ணன்(20), நாகப்பன் மற்றும் சிறுவர்கள் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் தனியார் பஸ்சின் முன்புற கண்ணாடி நொறுங்கியது. மேலும் பயணிகள் சிலரும் லேசான காயம் அடைந்தனர். அதேபோல சரக்குவேனும் நொறுங்கியது. இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலைக்கு சென்று திரும்பிய போது விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலியானதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
Related Tags :
Next Story