ஆயிரம் ஸ்டாலின்- தினகரன் வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியை அசைக்க முடியாது - அரவக்குறிச்சியில் ஓ.பன்னீர்செல்வம் ஆவேச பேச்சு


ஆயிரம் ஸ்டாலின்- தினகரன் வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியை அசைக்க முடியாது - அரவக்குறிச்சியில் ஓ.பன்னீர்செல்வம் ஆவேச பேச்சு
x
தினத்தந்தி 7 May 2019 11:15 PM GMT (Updated: 7 May 2019 7:19 PM GMT)

ஆயிரம் ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று அரவக்குறிச்சி தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

கரூர்,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக வி.வி.செந்தில்நாதன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிப்பதற்காக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு காரில் கரூர் மாவட்டத்துக்கு நேற்று மாலை 6 மணியளவில் வந்தார். அவருக்கு கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாறையூர், அரவக்குறிச்சி, ஈசநத்தம், பள்ளப்பட்டி ஷாநகர், சின்னதாராபுரம் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு கேட்டு திறந்த வேனில் நின்றபடி ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த காலங்களில் யாருடைய ஆட்சி சிறப்பாக இருந்தது? மக்களுக்கான தொலைநோக்கு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தியது யார்? என்று சிந்தித்து பார்த்தால் அது அ.தி.மு.க. அரசாகத்தான் இருக்க முடியும். 20 கிலோ இலவச அரிசி வழங்கி ஏழை, எளிய மக்கள் உள்ளிட்டோருக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்தார் ஜெயலலிதா. அவரது வழியில் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டி தருவது, பெண்களுக்கு தாலிக்கு தங்கம், மிக்சி, கிரைண்டர் மற்றும் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி வேலை வாய்ப்புகளை பெருக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்ற மாநிலங்களை விட முன்னோடியாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டதால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதையறிந்ததும் தான், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளியோர் மற்றும் விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினோம். ஆனால் இதனை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க. கோர்ட்டுக்கு சென்று தடை உத்தரவை வாங்கி விட்டது. இந்த தேர்தல் முடிந்ததும் கோர்ட்டு தடையை நீக்கி 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

தி.மு.க.வினர் பிரசாரத்தின் போது அவர்களுடைய ஆட்சி நடந்த 2006-2011 காலக்கட்டத்தில் செய்த சாதனைகளை சொல்ல முடியாமல் இருக்கின்றனர். அப்போது ஏற்பட்ட மின் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் அடைந்த அவதியை மறக்க முடியுமா?. 2011-ல் ஜெயலலிதாவின் அரசு அமைந்ததும் தான் மின்தட்டுப்பாடு போக்கப்பட்டு, தமிழகம் மின்மிகை மாநில மாக மாறியது. தி.மு.க. ஆட்சியில் பல்வேறு நில அபகரிப்பு புகார்கள் எழுந்தன. அவை அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சியில் தான் விசாரிக்கப்பட்டு உரியவருக்கு நிலம் மீட்டு கொடுக்கப்பட்டது. தெய்வமாக இருந்து ஜெயலலிதா வழிநடத்துகிற போக்கில் தான் மக்களுக்காக நாங்கள் ஆட்சியை நடத்துகிறோம்.

கர்நாடகாவில் 4 அணை கட்ட கருணாநிதி கையெழுத்திட்டு வந்தார். ஆனால் அதற்கு மாறாக சட்டப்போராட்டம் நடத்தி காவிரியில் உரிமையை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா. அவரது வழியில் தான் உரிய தண்ணீரை காவிரியில் பெற்று விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் அ.தி.மு.க. அரசு வழங்கி வருகிறது. தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என மு.க.ஸ்டாலின் சொல்கிறார். எந்த கொம்பனாலும் அசைத்து கூட பார்க்க முடியாத எக்கு கோட்டையாக தான் அ.தி.மு.க. தற்போது திகழ்கிறது.எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என ஸ்டாலின் கங்கணம் கட்டி கொண்டு அலைகிறார். ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஆயிரம் தினகரன் வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. மே 23-ந்தேதி அ.தி.மு.க. ஆட்சி காணாமல் போய் விடும் என்று கூறுகிறார் ஸ்டாலின். அ.தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்த எந்த சக்தியாலும் முடியாது.

தற்போது துரோக சக்திகளான ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். ஆட்சி அமைதியாகவும், எவ்வித குறையும் இன்றி செல்வதால் அவர்களுக்கு பொறாமை ஏற்பட்டிருக்கிறது. இதனால் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகின்றனர். அரவக்குறிச்சிக்கு இடைத்தேர்தல் தேவைதானா?. இங்கு நிற்கும் தி.மு.க. வேட்பாளர் (செந்தில்பாலாஜி) எந்த கட்சியில் நின்று ஜெயித்தார், பின்னர் எந்த கட்சிக்கு தாவினார் என்பது எல்லாருக்கும் தெரியும். கடந்த 2006-ல் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கி ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு, வசதி- வாய்ப்புகளை பெருக்கிக்கொண்டார். இதையெல்லாமல் நினைத்து பார்க்க வேண்டாமா? துரோகத்திற்கும், நயவஞ்சகத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதன் ஒட்டுமொத்த உருவமாக தான் செந்தில்பாலாஜி இருக்கிறார்.கடந்த 2011-ல் கூட அவரால் தான், அரவக்குறிச்சியில் வி.வி.செந்தில்நாதன் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது ஜெயலலிதாவின் ஆன்மாவால் செந்தில்பாலாஜியை வீழ்த்த, மீண்டும் செந்தில்நாதனே களமாட வந்திருக்கிறார். எனவே எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா தந்த இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து செந்தில்நாதனுக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தர வேண்டும். அவர் வெற்றி பெற்றால் அரவக்குறிச்சி-பரமத்தி உள்பட 50 ஊராட்சிகளுக்கு ரூ.220 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஸ்டாலினால் எந்த காலத்திலும் முதல்-அமைச்சர் ஆக முடியாது. அதற்காக 2016-ல் அவர் முயற்சி எடுத்தார். சிவப்பு, மஞ்சள், ஊதா என கலர் கலராக சட்டை போட்டு திரிந்தார். சைக்கிள், ஆட்டோ என பலவற்றில் பயணம் செய்தார். அந்த வகையில் நேற்று முன்தினம் திருப்பூரில் போய் தறி நெசவு செய்வது போல் அமர்ந்திருக்கிறார். வீட்டில் உள்ள பெண் தண்ணீர் பிடிக்க வெளியே சென்ற போது, இப்படி போய் அமர்ந்து விட்டார். ஆனால் அந்த வீட்டிலும் பின்னால் ஜெயலலிதா படம் இருந்தது. இது போன்ற பல வேஷம் போட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின் போது, அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர். 

Next Story