சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு: குடிநீர் முறையாக வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு


சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு: குடிநீர் முறையாக வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 May 2019 4:45 AM IST (Updated: 8 May 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில், குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கோடையை முன்னிட்டு வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களில் உள்ள நீர் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் சென்னைக்கு நீர் வழங்கி வரும் ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், வீராணம் ஆகியவை குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதில் வீராணம் ஏரியில் தான் தற்போது நீர் அதிகமாக உள்ளது. மற்ற ஏரிகளில் நீரின் அளவு அதிகளவில் குறைந்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு கல்குவாரிகளில் இருந்து நீர் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதும் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு குறைந்ததாக இல்லை.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. குறிப்பாக வீடுகளில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளிலும் தற்போது குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னை மாநகரில் தண்ணீர் லாரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டையும் போலீசார் தளர்த்தியுள்ளனர். எனவே 24 மணி நேரமும் தண்ணீர் லாரிகள் நகரத்திற்குள் சென்று வருகிறது.

சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் குடிநீர் வினியோகம் செய்ய ஒப்பந்த முறையில் தண்ணீர் லாரிகளை பயன்படுத்தி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக காணப்படுவதால் பல்வேறு பகுதிகளில் மக்கள் குடங்களை வைத்து தண்ணீர் பிடிக்கும் காட்சிகளை காணமுடிகிறது.

சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தின் மூலம் தண்ணீர் லாரியில் குடிநீர் பெற ஆன்-லைன் அல்லது செல்போன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு முன்பதிவு செய்த பின்னரும் 2 வாரங்கள் கழித்து தான் குடிநீர் வழங்கப்படுவதாக சென்னை வாசிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

இது குறித்து தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் கடந்த சில நாட்களாக வீட்டில் ஒருவருக்கு ஒரு வாளி என்ற கணக்கில் தான் தண்ணீர் உபயோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் லாரிகளும் முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. ஒப்பந்த முறையில் தண்ணீர் லாரிகள் இயக்கப்படுவதால் அதிக லாபம் பெறும் நோக்கத்துடனே ஒப்பந்ததாரர்கள் செயல்படுகின்றனர்.

சென்னையில் அதிக அளவில் தண்ணீரை பயன்படுத்தும் நட்சத்திர ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒப்பந்த விலையை விட அதிக லாபத்தில் சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் இருந்து பெறப்பட்ட தண்ணீரை, வழங்கி வருகின்றனர். குடிநீர் வழங்கல் வாரியத்தில் எந்த ஒரு முன்பதிவுமின்றி இவர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் குடிநீர் வழங்கி வருகின்றனர்.

இதனால் அதிக விலை கொடுப்பவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் முறையாக வந்து சேர்வதில்லை. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் இந்த நேரத்தில் அரசு அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களின் இந்த போக்கை கண்டித்து முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story