கோவை சுங்கம் அருகே ருக்மணிநகரில் ரூ.99 லட்சத்தில் சிறுவர் பூங்கா; 90 சதவீத பணிகள் முடிந்தன
கோவை சுங்கம் அருகே ருக்மணிநகரில் ரூ.99 லட்சத்தில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்து உள்ளது.
கோவை,
ஸ்மார்ட் சிட்டி (சீர்மிகு நகரம்) திட்டத்தின் கீழ் கோவை நகரம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதனால் கோவையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை சுங்கம் அருகே உள்ள ருக்மணி நகர், சிவராம் நகர் மேற்கு, தெற்கு மற்றும் ஏ.கே.எஸ்.நகர் ஆகிய 4 இடங்களில் தலா ரூ.99 லட்சம் செலவில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு கோவை– திருச்சி ரோடு சுங்கம் அருகே ருக்மணி நகரில் ஒரு ஏக்கரில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி தொடங்கியது. இங்கு செயற்கை நீரூற்றுகள், காங்கேயம் இன காளைகள், வரிக்குதிரைகள், மான்கள் ஆகியவற்றின் சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கொக்குகள், இருவாச்சி பறவை உள்ளிட்ட அரியவகை பறவைகளின் மாதிரிகளும் இடம்பெற்று இருக்கிறது.
மேலும் பூங்காவில் நடைபாதை வசதி, ஓய்வு எடுக்கும் இடம், இருக்கை வசதி உள்பட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. இன்னும் ஒரு சில பணிகள் மட்டும் மேற்கொள்ள வேண்டி உள்ளது. அந்த பணியும் ஓரிரு நாட்களில் முடிந்து விடும்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்த பூங்காவில் சிறுவர்கள், சிறுமிகள் விளையாட தேவையான அனைத்து விளையாட்டு பொருட்களும் அமைக்கப்பட உள்ளன. தற்போது ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களை பொருத்தும் பணி நடந்து வருகிறது. மேலும் பூங்காவுக்குள் பசுமை சூழலை உணரும் வகையில், சுற்றிலும் அழகு செடிகள், அதன் நடுவில் புற்கள் நடப்பட்டு உள்ளன. இதுதவிர மரக்கன்றுகளும் நடப்பட்டு உள்ளன.
பொதுமக்கள் இந்த பூங்காவுக்குள் குடும்பத்துடன் செல்லும் போது, வெளியே வரவே மனம் இருக்காது. அந்த அளவுக்கு நவீனமாக அமைக்கப்படுகிறது. தற்போது 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன. ஒருசில பணிகளை மட்டுமே முடிக்க வேண்டும். அதுவும் விரைவில் முடிந்து விடும். குழந்தைகளை கவரும் வகையில் பூங்காவின் நுழைவு வாயிலில் பெரிய கற்களை அடுக்கி வைத்தது போல் கான்கிரீட் டில் அமைக்கப்பட்டு உள்ளது. இது பார்க்க மிக அழகாக இருக்கிறது.
வருகிற 23–ந் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். எனவே அதுவரை பூங்காவை திறக்க முடியாது. தேர்தல் நடத்தை விதிகள் முடிந்ததும் இந்த பூங்கா, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.