கொலை வழக்கில் திடீர் திருப்பம்: லாரி டிரைவரை மனைவியே கொன்றது அம்பலம்


கொலை வழக்கில் திடீர் திருப்பம்: லாரி டிரைவரை மனைவியே கொன்றது அம்பலம்
x
தினத்தந்தி 8 May 2019 5:00 AM IST (Updated: 8 May 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

புதுவை போக்குவரத்துதுறை அலுவலகம் அருகே சாக்கடையில் பிணமாக கிடந்த டிரைவரை மனைவியே கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

புதுச்சேரி,

புதுவை 100 அடி ரோட்டில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகம், தாசில்தார் அலுவலகத்தின் இடையே சாக்கடை வாய்க்கால் ஒன்று ஓடுகிறது. அதில் நேற்று முன்தினம் சாக்குமூட்டைக்குள் கட்டிய நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து சென்ற முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையின் முடிவில் நெல்லித்தோப்பு கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த லாரி டிரைவர் கமலக்கண்ணன் (வயது 35) என்பது தெரியவந்தது. அவரது உடலில் பல இடங்களில் காயங்களும் இருந்தன. அவரது உடலை மனைவி ஸ்டெல்லாவும் அடையாளம் காட்டினார். கதறி அழுத அவர் மயங்கி விழுந்தார்.

கமலக்கண்ணனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கொலையாளி யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கமலக்கண்ணனின் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது அவரது மனைவியின் நடவடிக்கைகள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. முன்னுக்குப்பின் முரணாகவும் அவர் பேசினார். எனவே போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால் விசாரணையின்போது அவ்வப்போது ஸ்டெல்லா மயங்கி விழுந்துள்ளார். முரணான தகவல்களையும் கொடுத்தார்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மனைவி ஸ்டெல்லாவே கமலக்கண்ணனை கொலை செய்ததாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது குடிப் பழக்கம் உடைய கமலக்கண்ணன் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறே நேற்று முன்தினமும் குடித்துவிட்டு தகராறு செய்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது குடிபோதையில் இருந்த கமலக்கண்ணனை கீழே தள்ளி தாக்கியதில் இறந்த தாக கூறப்படுகிறது. கணவன் இறந்ததை தனது உறவினர் ஒருவரிடம் ஸ்டெல்லா கூறியுள்ளார். கொலையை மறைக்க திட்டமிட்ட அவர்கள் தங்களுக்கு தெரிந்த ரவுடி ஒருவரை வரவழைத்துள்ளனர்.

அவர் உதவியுடன் பிணத்தை சாக்குமூட்டையில் கட்டி எடுத்து சென்று சாக்கடையில் வீசியது தெரிய வந்துள்ளது. ஆனால் கொலையை ஸ்டெல்லா மட்டும்தான் செய்தாரா? அதற்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்பது குறித்து போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. மேலும் பிணத்தை எடுத்து சென்றது எப்படி? என்பது குறித்தும் முரண்பாடான தகவல்களை ஸ்டெல்லா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

போலீசாரின் விசாரணையின்போது அடிக்கடி மயங்கி விழுந்த ஸ்டெல்லாவை போலீசார் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் இருவரும் போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

Next Story