அரசியல் சுய லாபத்துக்காக, ராஜீவ்காந்தி பற்றி விமர்சிப்பதா? அமைச்சர் நமச்சிவாயம் கண்டனம்
அரசியல் சுய லாபத்துக்காக ராஜீவ்காந்தி பற்றி விமர்சிப்பதா? என்று அமைச்சர் நமச்சிவாயம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
காங்கிரஸ் கட்சியின் புதுவை மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தேச ஒற்றுமையை காத்து நின்று, நாட்டிற்காக தன்னையே தாரை வார்த்த தியாக தலைவர் ராஜீவ்காந்தியை பற்றி பதவி சுகத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி அவதூறான செய்திகளை வெளியிட்டு வருகிறார். இச்செயலை புதுவை காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
சுக துக்கங்களை தூக்கி எறிந்துவிட்டு நாட்டின் நலன்காப்பதே தனது லட்சியம் என்று உறுதிபூண்டு பாடுபட்ட நேரு, இந்திராகாந்தி, ஒப்பற்ற தலைவர் ராஜீவ்காந்தியின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் விதமாக மோடி மேடைதோறும் உளறிவருகிறார். பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயன்று கொண்டிருக்கிறார். அவரின் பகல் கனவு என்றும் பலிக்காது.
இந்திய தாய் திருநாட்டை 21–ம் நூற்றாண்டுக்கு அழைத்து செல்ல அரும்பாடுபட்டு வெற்றி கண்ட தன்னலமற்ற தலைவர் ராஜீவ்காந்தி. அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கொண்டு வந்து அதிகாரத்தை வழங்கிய அற்புத தலைவர் ராஜீவ்காந்தி பற்றி பேச சர்வாதிகார மோடிக்கு எந்தவித தகுதியும் இல்லை. நாட்டை மறந்து விட்டு ஊர்சுத்தும் மோடிக்கு உண்மை வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை. அரசியல் சுய லாபத்திற்காக கீழ்த்தரமாக விமர்சிப்பது மோடி வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
மறைந்த தலைவர்களை பற்றியும் அவர்களின் தியாகங்களை பற்றியும் தனிப்பட்ட முறையில் விமர்சித்து தான் செய்த தவறை மறைக்க முயற்சிக்கும் மோடியின் தந்திரம் இனி இந்திய மக்களிடம் எடுபடாது. புரட்சிமிகு பாரதத்தை உருவாக்க அல்லும் பகலும் அயராது பாடுபட்ட ராஜீவ்காந்தியை விமர்சிக்கும் மோடியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.
தற்போது ராகுல்காந்தியின் அலை வீசிக்கொண்டிருப்பதை அனைவரும் அறிவர். நாட்டை ஆளுகின்ற தகுதிபடைத்த ஒரே இயக்கம் காங்கிரஸ் பேரியக்கம்தான் என்ற இந்திய மக்கள் எண்ணங்கள் தெள்ளத்தெளிவாக உணர்த்துகின்றன.
ரபேல் விமானம் வாங்கியதில் மாபெரும் ஊழல் செய்துவிட்டு பட்டேல் சிலைக்குள் ஒளிந்திருக்கும் மோடியின் சுயரூபம் தற்போது தெரிய தொடங்கியுள்ளது. பதவி சுகத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் இந்த கபட நாடகத்தின் முடிவு காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. வருகிற 23–ந்தேதி வெளியாகும் தேர்தல் முடிவின் மூலம் இந்திய மக்கள் மோடிக்கு இறுதி தீர்ப்பு தருவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.