திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு


திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 8 May 2019 4:00 AM IST (Updated: 8 May 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் மையத்தை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், திருப்பத்தூர், செங்கம், ஜோலார்பேட்டை, கலசபாக்கம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தனித்தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைகளின் பாதுகாப்பு அம்சங்களை பார்வையிட்டார்.

ஒவ்வொரு அறையிலும் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைந்து கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையில் கேமரா பதிவுகள் 24 மணி நேரமும் தடையின்றி செயல்படுகிறதா? என்று பார்வையிட்டார். மேலும் வாக்கு எண்ணும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ள முன்னேற்பாடு பணிகளையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து வாக்கு எண்ணும் பணியை பார்வையிடும் முகவர்களுக்கு தேவையான இடவசதி, காற்றோட்ட வசதி, மின்விளக்கு வசதிகளை முறையாக செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

Next Story