நகை பறிப்பில் பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கியவர்: போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்ற கைதி தப்பியோட்டம்


நகை பறிப்பில் பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கியவர்: போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்ற கைதி தப்பியோட்டம்
x
தினத்தந்தி 7 May 2019 9:45 PM GMT (Updated: 2019-05-08T02:19:39+05:30)

நகை பறிப்பின் போது பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கிய கைதி போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

திண்டுக்கல்,

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள வாகரையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகத்தின் மனைவி சரஸ்வதி மட்டும் கடையில் இருந்தார். அப்போது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் கடைக்கு வந்தனர். பின்னர் பொருட்கள் வாங்குவது போன்று நடித்து, சரஸ்வதி அணிந்து இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தனர். உடனே சரஸ்வதி சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.

அப்போது 3 வாலிபர்களும் தப்பி செல்ல முயன்றனர். அதில் ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கிக்கொள்ள 2 பேர் தப்பிவிட்டனர். இதையடுத்து பிடிபட்ட வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். பின்னர் கள்ளிமந்தையம் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கார்த்தி (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கியதில் காயமடைந்த அவர், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவரை போலீசார் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இயற்கை உபாதைக்காக கார்த்தி, மருத்துவமனை கழிப்பறைக்கு சென்றார். கழிப்பறைக்கு வெளியே போலீசார் காத்திருந்தனர்.

பின்னர் நீண்டநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவரை காணவில்லை. அப்போது, கம்பி மற்றும் கண்ணாடி எதுவும் இல்லாத கழிப்பறை ஜன்னல் வழியாக கார்த்தி தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தப்பி சென்ற கார்த்தியை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.போலீஸ் பாதுகாப்புடன் இருந்த கைதி தப்பி ஓடிய சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story