இடைத்தேர்தலுக்கு பிறகு ‘எடப்பாடி பழனிசாமி அரசு இருக்காது’ துரைமுருகன் பேச்சு


இடைத்தேர்தலுக்கு பிறகு ‘எடப்பாடி பழனிசாமி அரசு இருக்காது’ துரைமுருகன் பேச்சு
x
தினத்தந்தி 8 May 2019 3:45 AM IST (Updated: 8 May 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

‘இடைத்தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அரசு இருக்காது’ என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சிலுவைப்பட்டி விலக்கு பகுதியில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கனிமொழி எம்.பி., ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் கே.என்.நேரு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றம் செல்பவருக்கு ஆங்கிலம் அல்லது இந்தி தெரிந்திருக்க வேண்டும். அந்த இரண்டும் தெரியவில்லை என்றால் அவரால் மக்கள் பிரச்சினை குறித்து பேச முடியாது. கனிமொழி ஆங்கிலத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார். பெண் உரிமைக்காக முதல் குரல் கொடுப்பவர். அவர் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவார். அதேபோல் நடக்க உள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். காரணம் மத்திய- மாநில அரசுகளை காலி செய்ய மக்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தலுக்கு பிறகு நிச்சயம் எடப்பாடி பழனிசாமி அரசு இருக்காது. அவர்கள் சொல்கிறார்கள், மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக கனவு காண்கிறார் என்று. நாங்கள் கனவாவது காண்கிறோம். ஆனால் இனி நீங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று கனவு கூட காண முடியாது. அதற்கான வாய்ப்பு உங்களுக்கு இருக்காது.

தமிழகத்தில் அ.தி.மு.க. சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி செய்து உள்ளது. ஆனால் இந்த பகுதியில் தற்போது வரை தண்ணீர் பிரச்சினை தீரவில்லை. தண்ணீர் தராத அவர்களை மீண்டும் வெற்றி பெற விடக்கூடாது. தேர்தல் முடிவுக்கு பின்னர் இந்த ஆட்சி 3 மாதங்கள் கூட தாங்காது. இந்த தேர்தலில் கனிமொழி எம்.பி., சண்முகையா ஆகியோர் வெற்றி பெற்றால் இந்த ஊரில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்குவோம். மக்கள் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பூங்கோதை, லட்சுமணன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story