மேல்பாடி அருகே, சரக்கு ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி பலி - 7 குழந்தைகள் உள்பட 20 பேர் படுகாயம்
மேல்பாடி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். 7 குழந்தைகள், 9 பெண்கள் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ஆந்திர மாநிலம், குடிபாலா மண்டலம், மரக்கல் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 60). இவருடன் 9 பெண்கள், 4 ஆண்கள், 3 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் ஆக மொத்தம் 21 பேரும் வள்ளிமலை கோவிலில் நேற்று முன்தினம் சாமி கும்பிட வந்தனர். கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் தங்கினர். பின்னர் நேற்று காலை வள்ளிமலை- சாமந்திபுரம் சாலையில் சரக்கு ஆட்டோவில் 21 பேரும் சென்று கொண்டிருந்தனர்.
கிரி என்பவர் சரக்கு ஆட்டோவை ஓட்டினார். தேவேந்திரபுரம் அருகே சென்றபோது ஆட்டோ நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த பாறையின் மீது ஏறி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த அனைவரும் படுகாயமடைந்தனர்.
பின்னர் படுகாயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணவேணி பரிதாபமாக உயிரிழந்தார்.
வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூர்ணா, லதா, மைதிலி, கீதா, தனஞ்செழியன் ஆகிய 5 பேரும் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த தாமோதரன் உள்பட மற்றவர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்ததும் சரக்கு ஆட்டோவை ஓட்டி சென்ற டிரைவர் கிரி தப்பி ஓடி விட்டார்.
இந்த விபத்து குறித்து மேல்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story