தக்கலை அருகே, ரெயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை - எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி


தக்கலை அருகே, ரெயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை - எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி
x
தினத்தந்தி 8 May 2019 4:45 AM IST (Updated: 8 May 2019 5:42 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே புதூர் ஆலுவிளை பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின் வினோ. இவருடைய மகன் வெர்ஜின் (வயது 16). பெஞ்சமின் வினோ வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

வெர்ஜின் தக்கலையை அடுத்த பறைக்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்து தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். அதை தொடர்ந்து இந்த ஆண்டும் அதே பள்ளியில் மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார். இந்த தேர்வுக்கான முடிவு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

இந்த முறை தேர்வில் எப்படியும் தேர்ச்சி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த வெர்ஜினுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த தடவையும் அவர் தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவருக்கு தாயார் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வெர்ஜின், அப்பகுதியில் உள்ள நண்பனை பார்த்து விட்டு வருவதாக தாயாரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால், வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த தாயார், அப்பகுதியில் உள்ள நண்பர்களின் வீடுகளில் தேடினார். ஆனாலும் அவரை காணவில்லை.

இதற்கிடையே வாளோடு பகுதியில் உள்ள தண்டவாளத்தில் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை கேள்விபட்ட வெர்ஜினின் தாயார் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெர்ஜினின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெர்ஜினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் வெர்ஜின் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவன் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story