அனுமதியின்றி தயாரித்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் சிறுமிகள் உள்பட 4 பேர் காயம் வீடுகள் எரிந்து நாசம்
சிவகாசி அருகே அனுமதியின்றி தயாரித்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் சிறுமிகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தார்கள். இந்த விபத்தில் வீடுகள் நாசமாயின.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள தாயில்பட்டி அண்ணா காலனியை சேர்ந்தவர் முனியசாமி (வயது45). இவர் பட்டாசுக்கான பழைய காகிதங்களை வெட்டி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். மேலும் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையும் வைத்துள்ளார். பழைய காகிதங்களை சேமித்து வைக்கும் குடோன் சாலையின் ஒரு புறமும் வாகனம் பழுது பார்க்கும் கடை மற்றொரு புறமும் உள்ளது.
இந்த நிலையில் குடோனின் ஒரு பகுதியிலும் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையின் ஒரு பகுதியையும் விரிவு படுத்தி அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்ததாக தெரிகிறது. அக்கம் பக்கத்தில் வீடுகள் உள்ள இடத்தில் திருட்டுத்தனமாக பாம்பு மாத்திரை மற்றும் பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.
தொழிலாளர்கள் நேற்று மாலை பட்டாசு தயாரித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. அந்த பகுதியில் காகிதம் சேகரித்து வைத்து இருந்ததால் தீப்பற்றி மளமளவென்று எரியத்தொடங்கியது. பட்டாசுகள் வெடித்து அக்கம்பக்கத்து வீடுகளுக்குள் சென்று விழுந்ததில் அங்கும் தீப்பரவியது. மேலும் குடோனுக்கு எதிரே இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் இயங்கிய பட்டாசு தயாரிக்கும் இடத்திலும் தீப்பற்றியது. எங்கும் புகை மண்டலமாக காட்சி தந்த நிலையில் அங்கு வேலை செய்த தொழிலாளிகள் அலறியடித்து வெளியில் ஓடி வந்து உயிர் பிழைத்தனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்புதுறை அதிகாரி முத்துபாண்டி தலைமையில் வெம்பக்கோட்டை, சிவகாசி, சாத்தூர் ஆகிய இடங்களில் இருந்து 4 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 2 ஆம்புலன்சுகளும் வரவழைக்கப்பட்டன. அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. தீப்பிடித்து எரிந்த இடத்தில் யாரேனும் சிக்கி இருக்கலாம் என்று கருதியதால் துரிதமாக செயல்பட்டனர். தனியார் வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். முடிவில் தீக்குள் யாரும் சிக்கவில்லை என்பதை அறிந்து அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
எனினும் அக்கம்பக்கத்து வீடுகளுக்கு தீப்பரவியதில் கண்ணன் என்பவரது மனைவி கார்த்திகை லட்சுமி(26) அவரது மகள் விஜயவர்ஷினி(4), ரத்தினம் என்பவரது மனைவி குருவத்தாய்(45), செல்வகுமார் என்பவரது மகள் தர்ஷினி(5) ஆகிய 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ஆகியோரது வீடுகள் எரிந்து சேதமானது. மேலும் பலரது வீட்டு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தகர ஷெட் அமைத்து பட்டாசு தயாரித்த நிலையில் தகரம் பறந்து சென்று அருகிலுள்ள ஓட்டு வீடுகள் மீது விழுந்துள்ளன. இதில் சிலரது வீடுகள் சேதம் அடைந்தன.
தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், சிவகாசி கோட்டாட்சியர் தினகரன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். மேலும் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், தாசில்தார் ஸ்ரீதர் ஆகியோரும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள். வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்ட்ர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்தார். அனுமதியின்றி பட்டாசு தயாரித்த முனியசாமி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.