தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை சாவு


தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை சாவு
x
தினத்தந்தி 9 May 2019 4:45 AM IST (Updated: 8 May 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.

செங்குன்றம்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் அடுத்த பாப்பன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் பிரசாத் (வயது 34). இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் பீகார் மாநிலம்.

நேற்று முன்தினம் ரஞ்சித் பிரசாத் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி கீதா தேவி தனது 4 குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு வெளியே சென்று விட்டார். அப்போது வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளில் ரஜினி குமாரி என்ற 4 வயது பெண் குழந்தை வீட்டின் அருகே தரையோடு 4 அடி ஆழத்தில் இருந்த தண்ணீர் தொட்டி ஒன்றில் தவறி விழுந்து விட்டது.

அப்போது அங்கு வந்த கீதா தேவி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து ரஜினி குமாரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இந்திரன் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்.

Next Story