காதல் கணவருடன் தகராறு: தூக்குப்போட்டு பெண் தற்கொலை


காதல் கணவருடன் தகராறு: தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 9 May 2019 4:00 AM IST (Updated: 8 May 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்த கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோட்டக்குப்பம்,

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை அடுத்த அனுமந்தை குப்பைத்தைச் சேர்ந்தவர் சவுமியா (வயது 20). கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவர்கள் இருவரும் புதுச்சேரி நேருவீதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடையில் வேலை பார்த்தனர்.

அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அதுவே காதலாக மாறியது. அதைத் தொடர்ந்து இளையராஜாவும், சவுமியாவும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்பு இருவரும் சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு செல்லாமல், திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு புதுதென்றல் வீதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு நியா என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது. இளையராஜா சரக்கு மினிவேன் வாங்கி ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அதனால் மன வேதனை அடைந்த சவுமியா இரவில் கணவர் இளையராஜா தூங்கியபின்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்து பார்த்த இளையராஜா மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஆரோவில் போலீஸ் நிலையத்துக்கு அவர் தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஆரோவில் போலீசார் விரைந்து சென்று சவுமியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சவுமியாவின் சாவு குறித்து அவருடைய தாய் சுமதி ஆரோவில் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அந்த புகாரில் தனது மகளிடம் அவளின் கணவர் இளையராஜா வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும், எனவே எனது மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த புகாரை தொடர்ந்து கோட்டக்குப்பம் போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் உத்தரவின்பேரில் ஆரோவில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் திருமணமான 2 ஆண்டுகளிலேயே சவுமியா இறந்துவிட்டதால், அதுகுறித்து விழுப்புரம் உதவி கலெக்டரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Next Story