மத்தூர் அருகே பட்டாளம்மன் கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு


மத்தூர் அருகே பட்டாளம்மன் கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 9 May 2019 4:15 AM IST (Updated: 9 May 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே பட்டாளம்மன் கோவிலில் உள்ள ஐம்பொன் சிலையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள வேலாவள்ளி கிராமத்தில் பழமை வாய்ந்த பட்டாளம்மன் கோவில் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக கோட்டி என்பவர் இருந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் பூசாரி கோவிலுக்கு வந்தார்.

அப்போது கோவில் இரும்பு கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் உள்ளே சென்று பார்த்த போது கருவறையில் இருந்த ஐம்பொன்னால் ஆன 1½ அடி உயர பட்டாளம்மன் சிலை திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி இதுகுறித்து கிராமமக்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இந்த துணிகர சம்பவம் குறித்து மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது ஊருக்கு ஒதுக்குப்புறமாக கோவில் உள்ளதால் மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலையை திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கிருஷ்ணகிரியில் இருந்து மோப்ப நாய் பைரவி மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த சிலை திருட்டு தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story