சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வெண்ணந்தூர் தம்பதியின் குழந்தை திடீர் சாவு கண்ணாடி உடைப்பு-போலீசார் விசாரணை
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வெண்ணந்தூர் தம்பதியின் குழந்தை திடீரென இறந்தது. இதனால் ஆவேசம் அடைந்த உறவினர் ஒருவர் ஆஸ்பத்திரி கதவு கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 31). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா (25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவத்திற்காக சென்னை முகப்பேரில் உள்ள தனது தாய் புவனேஸ்வரி வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு அரசு ஆஸ்பத்திரியில் பிரியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து குழந்தைக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பாலசுப்பிரமணி-பிரியா தம்பதியினர் சென்னையில் இருந்து நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். சில நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்களது குழந்தைக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு வார்டில் கடந்த 18 நாட்களாக பிரியாவின் குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரியாவின் ஆண் குழந்தை நேற்று மாலை திடீரென இறந்துவிட்டதாக உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதை கேட்டு பாலசுப்பிரமணி, பிரியாவின் தாய் புவனேஸ்வரி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், குழந்தை பிறந்து 42 நாட்கள் தான் ஆகிறது. உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த குழந்தை திடீரென இறந்துவிட்டது என கூறுகிறீர்களே? எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கிருந்த பிரியாவின் உறவினர் பூபதி என்பவர் திடீரென குழந்தை இறந்துபோன ஆவேசத்தில் அங்கிருந்த ஒரு அறையின் கதவு கண்ணாடியை கையால் உடைத்தார். இதனால் கண்ணாடி உடைந்து சிதறியது. பின்னர் அவர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.
இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், ஆஸ்பத்திரியில் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக பாலசுப்பிரமணி, இவருடைய மனைவி பிரியா மற்றும் புவனேஸ்வரி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story