தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம்: விசைப்படகுகளை பழுதுநீக்கும் பணி தீவிரம் மீன்கள் விலை கடும் உயர்வு
தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி மீன்பிடி விசைப்படகுகளை பழுது நீக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி மீன்பிடி விசைப்படகுகளை பழுது நீக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மீன்பிடி தடைக்காலம்
தமிழ்நாட்டில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல், மே மாதங்களில் விசைப்படகுகள், இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க அரசு தடைவிதித்து வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் கடந்த மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், வேம்பார், தருவைகுளம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்தம் 412 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
பழுதுநீக்கும் பணி
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் படகுகளில் உள்ள பழுதுகளை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு உள்ள வலைபின்னும் கூடத்தில் வைத்து மீனவர்கள் வலைகளில் ஏற்பட்டு உள்ள பழுதுகளையும் சரி செய்து வருகின்றனர்.
மாவட்டத்தில் விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீன்களின் விலை அதிகரித்து உள்ளது.
விலை அதிகரிப்பு
இது குறித்து தருவைகுளம் மீன்வியாபாரி பக்ருதீன் கூறும் போது, மீன்பிடி தடைக்காலம் காரணமாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்கள் வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக மீன் விலை அதிகரித்து இருக்கிறது. ஒரு கிலோ வாளைமுரள் ரூ.250-க்கும், கலிங்கன்முரள் ரூ.350-க்கும், கருப்பு கலிங்கன் ரூ.270-க்கும், கட்டை முரள் ரூ.330-க்கும், சீலா ரூ.1000-க்கும், விளமீன் ரூ.150-க்கும், அயலை ரூ.220-க்கும், ஊளி மீன் ரூ.450-க்கும், சாலை மீன் ரூ.130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீன்கள் விலை அதிகரித்து இருப்பதால், மக்கள் மீன்கள் வாங்குவது குறைந்து இருக்கிறது. இதனால் வியாபாரிகளுக்கு போதுமான லாபம் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர் என்று கூறினார்.
Related Tags :
Next Story