நாமக்கல்லில் 142 பள்ளி வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு


நாமக்கல்லில் 142 பள்ளி வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 8 May 2019 10:15 PM GMT (Updated: 8 May 2019 7:33 PM GMT)

நாமக்கல்லில் நேற்று 142 பள்ளி வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முன்னதாக சப்-கலெக்டர் கிராந்தி குமார் ஆய்வை தொடங்கி வைத்து, பள்ளி வாகனங்களை பார்வையிட்டார்.

நாமக்கல்,

நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 333 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக நேற்று 142 பள்ளி வாகனங்கள் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் ஆகியோர் தலைமையில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கலைச்செல்வி, ராஜ்குமார் ஆகியோர் ஈடுபட்டனர்.

முன்னதாக நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடந்த இந்த ஆய்வு பணியை நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார் தொடங்கி வைத்து, பள்ளி வாகனங்களை பார்வையிட்டார். அப்போது பள்ளி வாகனங்களில் டிரைவர்களின் இருக்கைக்கு அருகில் தடுப்பு கம்பிகள், அவசர வழி கதவுகள் ஆகியவற்றை சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.

மேலும் ஒப்பந்த அடிப்படையில் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் தனியார் வாகனங்களும் அரசு விதிமுறைகளை பின்பற்றி செயல்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என சப்-கலெக்டர் கிராந்தி குமார் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கூறினார்.

அதைத்தொடர்ந்து நடந்த ஆய்வில் தீ அணைப்பான் கருவி, முதலுதவி பெட்டி மற்றும் பலகைகள் உள்பட பல்வேறு அம்சங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் பள்ளி வாகனங்களின் படிக்கட்டுகள் தரை தளத்தில் இருந்து எத்தனை அடி உயரத்தில் உள்ளது என்பதையும், அந்த உயரம் அரசு நிர்ணயம் செய்த அளவீட்டில் உள்ளதா என்பதையும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சரி பார்த்தனர்.

இதில் 8 பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டது. பின்னர் அந்த குறைபாடுகளை சரி செய்து ஆய்வுக்கு கொண்டு வரும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையே பள்ளி வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து நாமக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கனகராஜ், பொன்னுசாமி தலைமையிலான குழுவினர் செயல்விளக்கம் செய்து காட்டினர். அதேபோல் பள்ளி வாகனங்களின் டிரைவர்களுக்காக கண் பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை முகாமும் நடைபெற்றது. இதில் டிரைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

Next Story