திருப்பூர் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட 15 பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிப்பு; மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை
திருப்பூர் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட 15 பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருப்பூர்,
திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களை போலவே சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. இவை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன. ஆனால் அனுமதியின்றியும், முறைகேடாகவும் செயல்பட்டு வரும் சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் நொய்யல் ஆறு, ஜம்மனை ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளில் சாயக்கழிவுநீர் மற்றும் பிரிண்டிங் கழிவுநீரை திறந்து விடுகின்றன.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் மாசுபடுகிறது. அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்படுகிறது. மேலும், சிலர் விவசாய நிலங்களில் திறந்துவிடுவதால் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே இது போன்ற நிறுவனங்களை கண்டுபிடித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து கொண்டிருக்கிறார்கள்.
அதன்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு முறைகேட்டில் ஈடுபடும் சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் நீர்நிலைகளில் கழிவுநீர் செல்லும் சம்பவம் தொடர்ந்தது. இதனால் அதிகாரிகள் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இதில் திருப்பூர் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட 15 பிரிண்டிங் நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த நிறுவனங்களின் விவரங்களை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சென்னை தலைமை அலுவலகத்திற்கும், மாவட்ட கலெக்டருக்கும் அனுப்பி வைத்திருந்தனர்.
அனுமதியின்றி செயல்பட்ட 15 நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்க கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி திருப்பூர் சிறுபூலுப்பட்டியில் உள்ள சூர்யா பிரிண்டிங் நிறுவனம், அம்மா பாளையத்தில் உள்ள பி.ஆர்.கே. பிரிண்டிங் நிறுவனம், சாமுண்டிபுரத்தில் இயங்கி வந்த எஸ்.எஸ்.டி. திருமலை பிரிண்டர்ஸ், எம்.அன்ட்.எஸ். பிரிண்டிங் நிறுவனம், மாஸ்டர் பிரிண்டிங் நிறுவனம் உள்பட தென்னம்பாளையம், ஆத்துப்பாளையம், ராக்கியாபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி இயங்கி வந்த 15 பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி செந்தில்விநாயகம் கூறியதாவது:–
திருப்பூரில் முறைகேடாகவும், அனுமதியின்றியும் செயல்பட்டு வரும் சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கிறோம். அதிகாரிகளின் தொடர் ஆய்வில் தற்போது இந்த 15 பிரிண்டிங் நிறுவனங்கள் சிக்கியுள்ளன. மேலும், பல இடங்களில் ஆய்வு செய்ய உள்ளோம்.
டேங்க் லாரிகளில் சாயக்கழிவுநீர் கொண்டு செல்லப்படுவதாகவும் புகார் வந்துள்ளன. இது தொடர்பாகவும் சோதனை செய்து வருகிறோம். விரைவில் இது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கலாம். விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.