பெண்களிடம் ஆபாசமாக பேசி மிரட்டிய வழக்கு: பியூட்டி பார்லர் மேலாளர் கைது


பெண்களிடம் ஆபாசமாக பேசி மிரட்டிய வழக்கு: பியூட்டி பார்லர் மேலாளர் கைது
x
தினத்தந்தி 8 May 2019 10:15 PM GMT (Updated: 2019-05-09T01:22:38+05:30)

சேலத்தில் பெண்களிடம் ஆபாசமாக பேசி மிரட்டிய வழக்கில் பியூட்டி பார்லர் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

சேலம், 

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரேவதி(32) என்ற திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் சேலம் அழகாபுரம் பகுதியில் ஒரு வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். நல்லதம்பி அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையில், நல்லதம்பிக்கும் மேலும் 2 பெண்களுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்களுடனும் அவர் அடிக்கடி செல்போனில் வீடியோ காலில் பேசி உள்ளார்.

இந்தநிலையில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்ததாக கூறி நேற்று முன்தினம் ஒரு கும்பல் நல்லதம்பி வேலை பார்க்கும் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை தாக்கியது. மேலும் அந்த கும்பல் அங்கிருந்த ரேவதியையும் தாக்கியது. இதையடுத்து அந்த கும்பல் நல்லதம்பியை அழகாபுரம் போலீஸ் நிலையத்துக்கு இழுத்து சென்றது. அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து பியூட்டி பார்லரின் உரிமையாளர் தினேஷ்குமார் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், தனது பியூட்டி பார்லரில் வேலை பார்த்த பெண்களை மேலாளர் நல்லதம்பி ஆபாசமாக பேசி மிரட்டியதாக கூறி உள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து நல்லதம்பியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் ரேவதி கொடுத்த புகாரின் பேரில், பியூட்டி பார்லரில் புகுந்து தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில் விஜய், வினோத்குமார், சிவா, பிரபாத், சிவகுமார், விக்னேஷ், அஜித், சதீஷ், அர்ஜூன், தேவா ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். லட்சுமி பிரபா, பெரியசாமி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். பியூட்டி பார்லருக்கு வந்த பெண்களை நல்லதம்பி ஆபாசமாக படம் எடுத்தாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story