பிளஸ்-1 பொதுத்தேர்வு, நீலகிரியில் 94.87 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
பிளஸ்-1 பொதுத்தேர்வில் நீலகிரியில் 94.87 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை நீலகிரியில் குன்னூர் கல்வி மாவட்டம் மற்றும் கூடலூர் கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 213 மாணவர்கள், 3 ஆயிரத்து 821 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 34 பேர் எழுதினார்கள். இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வெழுதிய மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்களுக்கு பாடவாரியாகவும், மொத்த மதிப்பெண்கள் குறித்த விவரமும் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது.
இதனை பெரும்பாலான மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே பார்த்து, தேர்ச்சி பெற்றது குறித்து பெற்றோர், உறவினர்களிடம் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து தாங்கள் பெற்ற மதிப்பெண்களை பார்த்து தெரிந்துகொண்டனர். ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பிளஸ்-1 மாணவ-மாணவிகள் யாரும் வரவில்லை. அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே வந்திருந்தனர். அவர்கள் தங்களது பள்ளியில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தேர்ச்சி சதவீதத்தை இணையதளத்தில் பார்த்தனர்.
ஊட்டியில் அரசு உதவி பெறும் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பிளஸ்-1 மாணவிகள் 3 பேர் மட்டும் காலை 11 மணியளவில் வந்தனர். அங்கு அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு இருந்த தேர்வு முடிவுகளை பார்த்த பிறகு, அவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஆசிரியைகளுக்கு இனிப்புகளை வழங்கினர். நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 3 ஆயிரத்து 213 மாணவர்கள் எழுதி, 2 ஆயிரத்து 973 பேர் தேர்ச்சி பெற்றனர். 3 ஆயிரத்து 821 மாணவிகள் தேர்வு எழுதி, அதில் 3 ஆயிரத்து 700 பேர் தேர்ச்சி அடைந்தனர்.
நீலகிரியில் மொத்தம் 6 ஆயிரத்து 673 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 94.87 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 2.48 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. பிளஸ்-1 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் தமிழக அளவில் நீலகிரி மாவட்டம் 20-வது இடத்தை பிடித்து உள்ளது.
Related Tags :
Next Story