காதல் தோல்வி காரணமாக பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் தீவிர விசாரணை


காதல் தோல்வி காரணமாக பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 9 May 2019 4:15 AM IST (Updated: 9 May 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

காதல் தோல்வி காரணமாக பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-

சிங்காநல்லூர்,

தூத்துக்குடி எழில்நகரை சேர்ந்தவர் முதலாளிசாமி. இவருடைய மகள் சுப்புலட்சுமி (வயது 23). என்ஜினீயரிங் படித்து உள்ளார். இவருடைய அண்ணன் மது குடித்து விட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் சுப்புலட்சுமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவை மசக்காளிபாளையத்தில் உள்ள தனது சகோதரி கார்த்திகா (24) வீட்டில் வந்து தங்கினார்.

கார்த்திகாவின் கணவர் முனியசாமி (25) கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சுப்புலட்சுமி ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். முனியசாமியும், கார்த்திகாவும் நேற்று முன்தினம் ஊட்டிக்கு சென்றனர். சுப்புலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் நீண்ட நேரமாக சுப்புலட்சுமி தங்கி இருந்த வீடு பூட்டியே கிடந்தது. இதனால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டின் கதவை தட்டினார்கள். பலமுறை தட்டியும் கதவு திறக்கப்பட வில்லை. உடனே அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது சுப்புலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுப்பு லட்சுமியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

தற்கொலை செய்து கொண்ட சுப்புலட்சுமி ஒருவரை காதலித்து உள்ளார். அவர், அந்த நபருடன், நீண்ட நேரம் பேசுவது வழக்கம். அவருடைய செல்போனை சோதனை செய்தபோது யாரிடம் பேசினார் என்ற விவரம் அனைத்தும் அழிக்கப்பட்டு இருந்தது. எனவே அவர் யாரிடம் எல்லாம் பேசினார் என்ற பட்டியலை தயார் செய்து வருகிறோம்.

முதற்கட்ட விசாரணையில் அவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்து உள்ளது. தூக்கில் தொங்கும்போது கையால் தூக்கு கயிற்றை பிடித்து தப்பித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக அவர் தனது கைகளை துப்பட்டாவால் கட்டி உள்ளார். சினிமாவில்தான் இதுபோன்று நடக்கும். அதை பார்த்துதான் சுப்புலட்சுமி தனது கைகளை கட்டிக்கொண்டு தூக்கில் தொங்கி உள்ளார்.

சுப்புலட்சுமி காதலிப்பது அவருடைய சகோதரி கார்த்திகாவுக்கும் தெரியும். அவரும் காதலித்து திருமணம் செய்தவர் என்பதால், தனது தங்கையின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் யாரை காதலிக்கிறார் என்பது தெரியாது. தற்கொலை செய்யும் முன்பு முன்பக்க கதவை மட்டும் பூட்டிவிட்டு, பின்கதவை பூட்டாமல் விட்டு உள்ளார். எனவே சுப்புலட்சுமியின் காதலர் யார்? எதற்காக காதலில் தோல்வி ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story