பழனி அருகே, கரும்புகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்
பழனி அருகே கோம்பைபட்டியில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் கரும்புகளை சேதப்படுத்தியது.
பழனி,
பழனி அருகே கணக்கன்பட்டி ஊராட்சியில் கோம்பைபட்டி கிராமம் உள்ளது. மலையடிவாரத்தில் கிராமம் உள்ளதால், இங்குள்ள தோட்டங்களில் கரும்பு, மா, காய்கறி உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் உணவு, தண்ணீர் தேடி தோட்டங்களுக்குள் புகும் காட்டுயானைகள் அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
கடந்த 5-ந்தேதி தர்மதுரை என்பவரின் தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகள் சோலார்வேலியை சேதப்படுத்தியதுடன் மாமரங்களின் கிளைகளை முறித்துவிட்டு சென்றன. இதையடுத்து விவசாயிகள் அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த செந்தில், ஈஸ்வரன் ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சுமார் 7 காட்டுயானைகள் புகுந்தன. பின்னர் அங்கு பயிரிட்டிருந்த கரும்புகளை தின்றும், சேதப்படுத்தியும் சென்றன. காலையில் வந்து பார்த்த விவசாயிகள் கரும்புகள் சேதமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, காட்டுயானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. எனவே அவற்றை விரட்ட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story