குடவாசல் அருகே, மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது


குடவாசல் அருகே, மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 May 2019 3:45 AM IST (Updated: 9 May 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குடவாசல், 

குடவாசல் அருகே உள்ள நாரணமங்கலம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் மதியழகன்(வயது49). இவர் சம்பவத்தன்று குடவாசல் நடுஅக்ரஹார தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று தனது வேலையை முடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து மதியழகன் குடவாசல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றவர்களை தேடி வந்தனர்.

குடவாசல் அருகே உள்ள பிலாவடியை சேர்ந்தவர் கவிமாறன். இவர் குடவாசல் அரசு மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் மதிய உணவுக்கு செல்ல வாகன நிறுத்துமிடத்துக்கு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து கவிமாறன் குடவாசல் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் குடவாசல் போலீசார் மணப்பறவை பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வலங்கைமான் வளையல்கார தெருவை சேர்ந்த வீரையன் மகன் சங்கர் (35) என்றும், மதியழகன், கவிமாறன் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து

போலீசார் சங்கரை கைது செய்து அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Next Story