தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் தி.மு. க. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் பேச்சு


தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் தி.மு. க. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 9 May 2019 3:15 AM IST (Updated: 9 May 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

3 சென்ட் இலவச நிலம், மாணவர் கல்வி கடன் தள்ளுபடி உள்பட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என்று அரவக்குறிச்சி தொகுதியில் 2-வது நாள் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேசினார்.

கரூர்,

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று இரண்டாவது நாளாக பிரசாரம் செய்தார். மலைக்கோவிலூர், வேலம்பாடி, இனுங்கனூர், பள்ளப்பட்டி ஷா நகர் கார்னர், ஆண்டிப்பட்டி கோட்டை ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அனாதையாக இருக்கிறது. இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த செந்தில் பாலாஜி சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அதனால் தான் இங்கு தற்போது இடைத்தேர்தல் நடக்கிறது. முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழல் நிறைந்தவராக இருக்கிறார், லஞ்சம் வாங்குகிறார், எனவே அவரை பதவி நீக்கம் செய்து விட்டு வேறு ஒருவரை முதல் -அமைச்சராக்கவேண்டும் என கவர்னரிடம் மனு கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். இது தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம். ஆனால் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டி செந்தில் பாலாஜி உள்பட 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி பொய் பிரசாரம் செய்து வருகிறார். அதற்கு இந்த தேர்தலில் நீங்கள் சரியான பாடம் புகட்டவேண்டும்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என முதலில் சொன்னவர் துணை முதல் -அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தான். ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் ஓ. பன்னீர்செல்வத்துக்கு 6 முறை சம்மன் அனுப்பியும் ஒரு முறை கூட அவர் ஆஜர் ஆகவில்லை. இந்த விசாரணை ஆணையம் என்பது வெறும் கண்துடைப்பு தான்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஜெயலலிதாவின் மரணத்திற்கு யார் காரணம்? குற்றவாளிகள் யார் என்பதை நாட்டிற்கு அடையாளம் காட்டி சிறையில் அடைப்பேன். யார் விட்டாலும் இந்த ஸ்டாலின் விட மாட்டான். கருணாநிதி 2 மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரது உடல் நலம் பற்றியும் சிகிச்சை முறைகள் குறித்தும் தினமும் வெளியில் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. மருத்துவ குழுவினரும் மருத்துவ அறிக்கையை பத்திரிகை செய்தி வாயிலாக சொன்னார்கள். கருணாநிதி அப்போது முதல்- அமைச்சராக இல்லாவிட்டாலும் அவரது உடல் நிலை பற்றி தெரிவித்தோம். அண்ணா, எம்.ஜி.ஆர்.உடல் நலக்குறைவாக இருந்த போதும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவும் முதல்- அமைச்சராக இருந்த போது தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெளிப்படையாக சொல்லவில்லை. டீ குடித்தார், இட்லி சாப்பிட்டார் என்று மட்டும் தான் சொல்லி வந்தனர். கருணாநிதி நினைவிடத்தில் தினமும் காலை மாலை என 5 ஆயிரம் பேர், 10 ஆயிரம் பேர் வந்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இது நமக்கு கிடைத்த பெருமை. கருணாநிதி மறைவுக்கு நாம் இரங்கல் கூட்டம் நடத்தினோம். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது உண்டா? இல்லை.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள மைனாரிட்டி அரசுக்கு பக்க பலமாக, துணையாக முட்டுக்கொடுத்துக் கொண்டு இருந்து வருவது மோடி ஆட்சி. ஆகவே மோடி ஆட்சியே மத்தியில் இல்லை என்று சொன்னால் நிச்சயமாக தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசும் எவ்வளவு தான் சதிதிட்டம் போட்டாலும், சூழ்ச்சிகள் செய்தாலும், முயற்சிகள் செய்தாலும் அவர்கள் ஆட்சியில் ஒரு போதும் நீடிக்க வாய்ப்புகள் இல்லை. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் செந்தில் பாலாஜி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இருக்கிறார்.

அவர் வெற்றி பெற்று சென்றதும் தனது பணிகளை நன்றாக செய்து முடிப்பார். அரவக்குறிச்சி ஒன்றியத்தை சேர்ந்த 20 ஊராட்சிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். அரவக்குறிச்சி தொகுதியில் அரசு கலைக்கல்லூரி உருவாக்கப்படும். முருங்கை உள்ளிட்ட அனைத்து விவசாய பொருட்களுக்கும் குளிர்பதன கிடங்கு நிச்சயமாக அமைக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி அதற்கான ஊதியத்தையும் பணி செய்யும் இடத்திலேயே வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும். ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு தடுப்பணைகள் கட்டப்பட்டு நீரை சேமிக்க தனி கவனம் செலுத்தப்படும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க இந்த பகுதியில் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.

செந்தில் பாலாஜி தொலைநோக்கு சிந்தனையுடன் ஒரு திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து இருக்கிறார். அரவக்குறிச்சி தொகுதியில் வீட்டுமனை இல்லாத 25 ஆயிரம் பேருக்கு 3 சென்ட் வீட்டுமனை நிலம் இலவசமாக வழங்கப்படும் என கூறி இருக்கிறார். அதற்கான ஆயத்த பணிகளில் படிவங்கள் வழங்கப்பட்டு முழுமையாக ஈடுபட்டு உள்ளார். செந்தில் பாலாஜி அறிவித்து உள்ள இந்த திட்டத்தை என்னிடம் எடுத்து சொன்னபோது அரவக்குறிச்சி மட்டும் அல்ல, தமிழ்நாடு முழுவதும் நிறைவேற்றிட வேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. எனவே தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் நிறைவேற்றப்படும்.

இவை மட்டும் அல்ல கிராமப்புற மகளிருக்கு ரூ.50 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்கி சிறு தொழில்கள் தொடங்கும் திட்டம் உருவாக்கப்படும். 50 லட்சம் மகளிருக்கு மக்கள் நல பணியாளர் பணி வழங்கப்படும். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள ஒரு கோடி பேருக்கு சாலை பணியாளர்கள் வேலை வழங்கப்படும். நிலமற்ற ஏழை விவசாயிகள் வறுமை காரணமாக அடமானம் வைத்த 5 பவுன் வரை உள்ள தங்க நகை கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மாணவர்களின் கல்வி கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதிகள் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே கூறப்பட்டு உள்ளது.

நான் இங்கு அளிக்கும் வாக்குறுதிகள் ஏதோ தேர்தல் நேரத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும். ஏனென்றால் தி.மு.க.வை பொறுத்தவரை சொல்வதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம் என்பது தான் கருணாநிதி அளித்த உறுதிமொழி, அந்த உறுதிமொழியை அவரது மகனாகிய இந்த ஸ்டாலினும் நிறைவேற்றுவான். கருணாநிதி இப்போது நம்முடன் இல்லை. அவர் இல்லாமல் தேர்தலை சந்திக்கிறோம். கருணாநிதி நம்முடன் இல்லை என்றாலும் அவருடைய நினைவுகள், கொள்கைகள், லட்சியங்கள் எப்போதும் நம்முடன் இருந்து வருகிறது.

கருணாநிதி நம்மை விட்டு பிரிந்த நேரத்தில் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு 6 அடி நிலத்தை இப்போது ஆட்சியில் இருப்பவர்களிடம் கேட்டோம். முதல்- அமைச்சராக இருக்க கூடிய எடப்பாடி பழனிசாமிக்கு நான் கடிதம் எழுதினேன். அதற்கு எந்த பதிலும் இல்லை. பொறுத்து. பொறுத்து பார்த்து பின்னர் நானே நேரடியாக அவரை பார்க்க புறப்பட்டேன். அவரது வீட்டுக்கே சென்றேன். வெட்கத்தை விட்டு சொல்கிறேன். அவரது கையை பிடித்துக்கொண்டு சொன்னேன். 5 முறை கருணாநிதி தமிழக முதல்- அமைச்சராக இருந்திருக்கிறார். இந்த பாரத தேசத்தின் பிரதமர்களை எல்லாம் அடையாளம் காட்டி இருக்கிறார். பெருந்தலைவர் காமராஜருக்கு மணி மண்டபம் கட்டியவர் கருணாநிதி, அண்ணாவுக்கு நினைவு மண்டபம் அமைத்தவர். எம்ஜிஆருக்கே தலைவராக இருந்தவர். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர். அப்படிப்பட்ட கருணாநிதிக்கு ஆறடி நிலம் ஒதுக்கி தருமாறு கேட்டேன். அண்ணா மறைந்த நேரத்தில் கருணாநிதி அளித்த உறுதிமொழியை நிறைவேற்றி வைக்க வேண்டும். அதற்காக தான் ஆறடி நிலம் கேட்கிறோம் என்றேன். ஆனால் திட்டவட்டமாக மறுத்து விட்டனர். அதற்கு பிறகு நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றத்தில் வாதாடினோம். நீதிபதி அளித்த தீர்ப்பு என்ன தெரியுமா? கருணாநிதி தி.மு.க.வுக்கு மட்டும் தலைவர் அல்ல. ஒட்டு மொத்த உலக தமிழர்களின் தலைவர். மூத்த முதறிஞர். எனவே அவருக்கு இடம் ஒதுக்கப்படுகிறது என அறிவித்தார். அதன் பின்னர் தான் கருணாநிதி உடலை அண்ணாவுக்கு பக்கத்தில் அவர் ஓய்வு எடுக்கவேண்டிய இடத்தில் அடக்கம் செய்தோம்.

தலைவர் கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்த இந்த கயவர்களுக்கு நாம் தமிழ்நாட்டிலே இடம் கொடுக்கலாமா? என்ற அந்த கேள்வியை தான் நான் உங்களிடத்தில் கேட்கிறேன். அதற்கு நீங்கள் உதவி செய்ய தயாராகுங்கள். வருகிற 19-ந்தேதி வாக்குச்சாவடிக்கு சென்று செந்தில் பாலாஜியை ஆதரித்து உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டு விடைபெறுகிறேன்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

தேர்தல் பிரசாரத்தின் போது மு.க.ஸ்டாலின் ஒரு பெண் குழந்தைக்கு கண்மணி என பெயர் சூட்டினார். வேலம்பாடி என்ற இடத்தில் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது ஒரு பள்ளிவாசலில் தொழுகைக்கான பாங்கு ஒலி எழுப்பப்பட்டது. இந்த ஒலியை கேட்டதும் ஸ்டாலின் தனது பேச்சை நிறுத்தினார். பாங்கு ஒலி நின்ற பின்னர் மீண்டும் தனது பேச்சை தொடர்ந்தார். 

Next Story