போக்குவரத்து நெருக்கடியால் நாகர்கோவிலில் பல இடங்களில் விபத்து பொதுமக்கள் கடும் அவதி; போலீஸ் பற்றாக்குறை காரணமா?
நாகர்கோவிலில் போக்குவரத்து நெருக்கடியால் பல இடங்களில் விபத்து நடந்தது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். போலீஸ் பற்றாக்குறை காரணமாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதுமான போலீஸ் நியமிக்கப்படவில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
நாகர்கோவில்,
காண்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் சுற்றுலாத்தலங்கள் நிறைந்த குமரி மாவட்டத்தின் தலைநகரமாக திகழ்வது நாகர்கோவில். இங்கு பல ஆண்டுகளாக தீராத பிரச்சினையாக போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் மேம்பாலம் அமைத்து, திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாகர்கோவில் ஒழுகினசேரி மற்றும் கோட்டார் பகுதியிலும் மேம்பாலங்கள் அமைக்க மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்தநிலையில் நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக இந்த சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
ஏற்கனவே கோடை விடுமுறையையொட்டி குமரி மாவட்டத்துக்கு தற்போது வந்து செல்லும் வெளிமாவட்ட, வெளி மாநில வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையே அவ்வை சண்முகம் சாலையில் வாகன போக்குவரத்து தடைபட்டு, மாற்றுப்பாதைகளில் இயக்கப்படுவதால் நாகர்கோவில் மாநகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடிக்கு அளவே இல்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை காலை, மாலை நேரங்களில் மட்டும் அதாவது ஒன்றிரண்டு மணி நேரங்கள் மட்டுமே நீடித்து வந்த போக்கவரத்து நெரிசல் கடந்த சில தினங்களாக காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக பல மணி நேரங்கள் வரை நீடிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் முதல் கார், வேன், பஸ், லாரி போன்ற வாகனங்கள் நகரில் ஊர்ந்துதான் செல்கின்றன. நாகர்கோவில் வடசேரி ரோடு, கேப் ரோடு, கோட்டார் ரோடு, கே.பி.ரோடு, கோர்ட்டு ரோடு, பொதுப்பணித்துறை அலுவலக சாலை என அனைத்து முக்கிய சாலைகளும் வாகன நெருக்கடியில் சிக்கித்தவிக்கின்றன.
சில நேரங்களில் முக்கிய சந்திப்பு பகுதிகளில் வாகனங்கள் அங்குமிங்கும் செல்ல முடியாமல் 10 நிமிடங்கள், 15 நிமிடங்கள் என நிறுத்தி வைக்கப்படுகின்றன. பின்னர் சில அடி தூரம் ஊர்ந்து சென்று மீண்டும் நிறுத்தப்படுகின்றன. இம்மாதிரியான வேளைகளில் திடீரென வாகனங்கள் நிறுத்தப்படும்போது ஒன்றன்பின் ஒன்றாக நிற்கும் வாகனங்கள் முன்னும், பின்னுமாக மோதிக்கொள்கின்றன. இதுபோன்ற விபத்துகள் நேற்று நாகர்கோவில் நகரில் பல இடங்களில் நடந்தன.
நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி அருகே நேற்று மதியம் போக்குவரத்து நெருக்கடியால் நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள் திடீரென புறப்பட்டன. சிறிது நேரத்தில் மீண்டும் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றது. திடீரென வாகனங்கள் நின்றதால் பிரேக் போட்டும் நிற்காத மினி பஸ் ஒன்று முன்னால் நின்ற ஆட்டோ மீது மொதியது. மோதிய வேகத்தில் ஆட்டோ முன்னால் நின்ற அரசு பஸ் மீது மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதியும், பின்பகுதியும் சேதம் அடைந்தது. இதில் ஆட்டோடிரைவர் காயம் அடைந்தார். இதேபோல் கோட்டார் சந்தை சந்திப்பு பகுதியில் ஒரு வேனின் பின் பகுதியில் கார் மோதியது. அதைத்தொடர்ந்து கோட்டார் பகுதியில் 2 கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இதிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேபோல் நேற்று பல இடங்களில் சிறு, சிறு விபத்துகள் நடைபெற்றன.
இந்த போக்குவரத்து நெருக்கடியால் வடசேரியில் இருந்து கோட்டார் பறக்கை சந்திப்பு பகுதியை கடந்து செல்வதற்கு சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலானது. தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்கும் நிலையில், மணிக்கணக்கில் நாகர்கோவில் நகர சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
முன்பெல்லாம் போக்குவரத்து போலீசார் முக்கிய சந்திப்புகளில் நின்று போக்குவரத்து நெருக்கடி ஏற்படாதவாறு வாகனப்போக்குவரத்து சீராக நடைபெறும் வகையில் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பணிக்குச் சென்ற போலீசாரில் பெரும்பாலானோர் இன்னும் போலீஸ் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு திரும்பவில்லை. பறக்கும்படையில் அமர்த்தப்பட்ட போலீசார் அந்த பணியை தொடர்கின்றனர். மேலும் ஏராளமான போலீசார் நாகர்கோவில் கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். போலீஸ் நிலையங்களில் இருக்கும் போலீசாரில் பலர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கும் சென்று வருகின்றனர்.
இதனால் இருக்கின்ற போலீசாரை வைத்துதான் நாகர்கோவில் நகரில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணி நடைபெறுகிறது. போலீஸ் பற்றாக்குறை காரணமாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதுமான போலீஸ் நியமிக்கப்படவில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதனாலேயே பல இடங்களில் போலீசார் இல்லாத நிலை உள்ளது. அந்தப்பகுதிகளில் வாகனங்கள் போட்டி, போட்டுக்கொண்டு ஒன்றொடொன்று முந்திச்செல்ல முயல்வதும் போக்குவரத்து நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
எனவே அவ்வை சண்முகம் சாலையில் நடைபெறும் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், நகரில் போக்குவரத்து சீராக நடைபெற முக்கிய சந்திப்புகளில் போதுமான போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மாவட்ட காவல்துறை போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Related Tags :
Next Story