மணல் சரிந்து விழுந்து சிறுவன் சாவு: 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது


மணல் சரிந்து விழுந்து சிறுவன் சாவு: 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 9 May 2019 4:15 AM IST (Updated: 9 May 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

மணல் சரிந்து விழுந்து சிறுவன் இறந்த சம்பவத்தில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை,

போளூர் தாலுகா சேதாரம்பட்டு மதுரா முனியன்குடிசை கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவருடைய மகன் வெற்றிவேல் (வயது 16). இவன் கடந்த 5-ந் தேதி நாகநதியில் மணல் தோண்டப்பட்ட திட்டுக்களில் விளையாடிக் கொண்டிருந்தபோது கால் தடுமாறி பள்ளத்தில் விழுந்தான். அப்போது மணல் சரிந்து விழுந்து, அதில் சிக்கி அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் மணல் திருட்டினால் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி வெற்றிவேல் இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து மணல் திருட்டில் ஈடுபடும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார்.

இதையடுத்து களம்பூர் போலீசார் சேதாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த லோகநாதன், லட்சுமணன், முனியன்குடிசை கிராமத்தை சேர்ந்த தரணி, கார்த்திக், விபிஷ்ணன், சம்புராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், ராம்ராஜ், பூபாலன், நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சீனு, அருள், செட்டியந்தல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை ஆகியோர் மீது மணல் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் பிரகாஷ், ராம்ராஜ், ஏழுமலை, அருள் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார்.

மணல் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கந்தசாமி எச்சரித்துள்ளார்.

Next Story