மாவட்டம் முழுவதும் பரவலாக மழை


மாவட்டம் முழுவதும் பரவலாக மழை
x
தினத்தந்தி 9 May 2019 3:45 AM IST (Updated: 9 May 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது.

திருவண்ணாமலை,

கோடை காலம் தொடங்கியதில் இருந்தே திருவண்ணாமலையில் வெயில் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்தனர். இந்த நிலையில் திருவண்ணாமலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை வலுத்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது. சிறிதுநேரம் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது.

திருவண்ணாமலையில் பெய்த மழையின் காரணமாக பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேங்கிக்கால் அண்ணா நுழைவு வாயில் அருகே கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாலையில் கால்வாய் அமைக்கப்பட்டது. தற்போது அந்த இடம் மேடான பகுதியாக காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் தேங்கும் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி காணப்படுகிறது. மழைநீர் வடிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேத்துப்பட்டு, தேவிகாபுரம், தேசூர், சி.ம.புதூர், குண்ணகம்பூண்டி, வெடால் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் கிராமம் பூமாசெட்டிக்குளம் பகுதி சாலையில் திடீரென மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு தாசில்தார் சுதாகர் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்று மரக்கிளையை வெட்டி அகற்றினர்.

தேவிகாபுரம் ஒட்டன் குடிசை பகுதியில் 3 குடிசை வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. தகவல் அறிந்ததும் தாசில்தார் அங்கு சென்று 3 குடும்பத்தை சேர்ந்த 9 பேரை மீட்டு தேவிகாபுரரம் அரசு ஆண்கள் பள்ளியில் தங்க வைத்தார். அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை 5.45 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு 8 மணி வரை நீடித்தது. இதனால் குண்டும், குழியுமான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

Next Story