ஹாசன் கலெக்டர் மீது மந்திரி ரேவண்ணா குற்றச்சாட்டு ‘வறட்சி பணிகளை மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறார்’


ஹாசன் கலெக்டர் மீது மந்திரி ரேவண்ணா குற்றச்சாட்டு ‘வறட்சி பணிகளை மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறார்’
x
தினத்தந்தி 9 May 2019 4:00 AM IST (Updated: 9 May 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

ஹாசன் மாவட்டத்தில் வறட்சி பணிகளை மேற்கொள்ளாமல் கலெக்டர் வேடிக்கை பார்க்கிறார் என்று மந்திரி ரேவண்ணா குற்றம்சாட்டியுள்ளார்.

ஹாசன், 

ஹாசன் மாவட்டத்தில் வறட்சி பணிகளை மேற்கொள்ளாமல் கலெக்டர் வேடிக்கை பார்க்கிறார் என்று மந்திரி ரேவண்ணா குற்றம்சாட்டியுள்ளார்.

ரேவண்ணா பேட்டி

ஹாசன் மாவட்ட பொறுப்பு மந்திரியும், பொதுப்பணித்துைற மந்திரியுமான எச்.டி.ரேவண்ணா நேற்று ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடிநீர் பிரச்சினை

கர்நாடகத்தில் வறட்சி நிவாரண பணிகளை சரிவர செய்யவில்லை என்று மாநில அரசு மீது பா.ஜனதாவினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆனால் அதே நேரத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நேரத்தில் மாநில அரசு வறட்சி பணிகளை மேற்கொள்கிறது என்று தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதாவினர் புகார் கொடுக்கிறார்கள். வறட்சி விஷயத்தில் பா.ஜனதா மக்களிடம் இரட்டை வேடம் போடுகிறது.

ஹாசன் மாவட்டத்தில் வறட்சி நிவாரண நிதியாக ரூ.8 கோடி மாநில அரசு ஒதுக்கியது. அந்த நிதி மாவட்ட கலெக்டரின் வங்கி கணக்கில் உள்ளது. ஹாசன் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. இதனை தீர்க்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர் வேடிக்கை பார்க்கிறார்

ஹாசன் மாவட்ட கலெக்டர், தேர்தல் ஆணையத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது, கால்நடை தீவனங்கள் வழங்குவது பற்றியும், மழை பெய்தால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

ஹாசன் மாவட்டத்தில் வறட்சி நிலவுகிறது. ஆனால் வறட்சி பணிகளை மேற்கொள்ளாமல் கலெக்டர் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார். இது சரியல்ல. வறட்சியை சரியாக கையாளவில்லை என்றால் அதற்கு கலெக்டர் தான் பொறுப்பேற்க வேண்டும்.

ராகுல் காந்தி தான் முடிவு செய்வார்

மாநிலத்தில் வறட்சி பணிகளை மேற்கொள்ளாமல் ரேவண்ணாவும், குமாரசாமியும் தங்கள் மகன்கள் வெற்றி பெற கோவில், கோவிலாக சுற்றுவதாக ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகிறார். நாங்கள் கோவிலுக்கு செல்லக் கூடாதா?. பிரதமர் மோடி கூட கோவில், கோவிலாக சுற்றி புரோகிதர்களை வைத்து சிறப்பு பூஜை செய்கிறார்.

சித்தராமையா முதல்-மந்திரியாக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுவது பற்றி கேட்கிறீர்கள். இதனை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி தான் முடிவு செய்வார். இந்த விவகாரத்தில் நான் எதுவும் கூற முடியாது.

ஆட்சி அதிகாரம் தான் முக்கியம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி இருக்காது என்று பா.ஜனதாவினர் கூறி வருகிறார்கள். இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளும் நீடிக்கும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஹாசன், மண்டியா, துமகூரு ஆகிய தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சி கட்டாயம் வெற்றி பெறும்.

பா.ஜனதாவினருக்கு மாநிலத்தின் வளர்ச்சி பற்றி எந்த கவலையும் இல்லை. அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் தான் முக்கியம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர்கள் செய்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story