ஷீனா போரா கொலை வழக்கு: பீட்டர் முகர்ஜிக்கு ஜாமீன் மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு
ஷீனா போரா கொலை வழக்கில் பீட்டர் முகர்ஜிக்கு ஜாமீன் வழங்க மும்பை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
மும்பை,
ஷீனா போரா கொலை வழக்கில் பீட்டர் முகர்ஜிக்கு ஜாமீன் வழங்க மும்பை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
ஷீனா போரா கொலை வழக்கு
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இந்திராணியின் 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம்வர் ராய் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்திராணியின் 3-வது கணவருமான பீட்டர் முகர்ஜியும் கைதானார். பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் ராகுல் முகர்ஜியை காதலித்ததால், ஷீனாபோராவை அவரது தாய் இந்திராணி கொலை செய்ததாக கூறப்பட்டது. இந்த கொலை வழக்கு மும்பையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சிறையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பீட்டர் முகர்ஜிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் குணமடைந்ததாக கோர்ட்டில் ஆஸ்பத்திரி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் மறுப்பு
இந்தநிலையில், அவர் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பரிசோதனைகளை செய்து கொள்ளவும், தனது உடல் நிலையை காரணம் காட்டியும் ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ரியாஸ் சக்லா முன்னிலையில் நேற்று நடந்தது.
அப்போது, பீட்டர் முகர்ஜி சார்பில் ஆஜரான வக்கீல் ஸ்ரீகாந்த் சிவாடே, அறுவை சிகிச்சைக்கு பின்னர் முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படாமல் பீட்டர் முகர்ஜி சிறைக்கு அனுப்பப்பட்டார். தற்போது அவருக்கு சிறை உகந்த இடம் அல்ல. அவர் இறந்து விட வாய்ப்பு உள்ளது என்றார். ஆனால் சி.பி.ஐ. தரப்பில் பீட்டர் முகர்ஜிக்கு ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரியாஸ் சக்லா, பீட்டர் முகர்ஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது என உத்தரவிட்டார். அதே நேரத்தில் ஆஸ்பத்திரி பரிந்துரை செய்தபடி அவரை போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ள நீதிபதி அனுமதி அளித்தார்.
Related Tags :
Next Story